சூரிச் விமான நிலைய பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தென்னாபிரிக்காவில் இருந்து விமானத்தில் சூரிச் வந்த பயணிகளை கொரோனா பரிசோதனை முன்னெடுக்குமாறு சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள Omicron கொரோனா மாறுபாடு. அமெரிக்கா, கனடா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை சூரிச் விமான நிலையத்தில் வந்து சேர்ந்த தென்னாபிரிக்க பயணிகள் அனைவருக்கும் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெடரல் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும், கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து சுவிஸ் ஏர் லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் பட்டியல் மாநில அதிகாரிகளுக்கு அனுப்பப்படும், அவை கொரோனா தொடர்பான விதிகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டுள்ளன என்பதை சரிபார்க்க வேண்டும் என்று சுகாதார அலுவலகம் உறுதியளித்தது.
இருப்பினும், மொத்த பயணிகளின் எண்ணிக்கையை வெளியிட சுகாதாரத்துறை மறுத்துள்ளது. முன்னதாக, சுவிட்சர்லாந்தின் பிரதான விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகளுக்கு சிறப்பு சோதனைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையிலேயே, சூரிச் விமான நிலையத்தில் சனிக்கிழமை வந்திறங்கிய பயணிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.