பிரான்சில் பீட்சாவில் நோய்க்கிருமிகள்... ஒருவர் பலி, 14 பேருக்கு கடுமையான பாதிப்பு: கொலை வழக்கு பதிவு
பிரான்சில் நெஸ்ட்லே நிறுவனத் தயாரிப்பான பீட்சா சாப்பிட்ட 14 பேருக்கு மூளை, இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெஸ்ட்லே நிறுவனத் தயாரிப்பான (NESN.S) Buitoni என்னும் பீட்சாவில் ஈ.கோலை என்னும் கிருமி இருந்ததால், அதை உண்டவர்களுக்கு கடுமையான உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஈ.கோலை தொற்று பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரெஞ்சு சுகாதார அமைச்சகத்தின் பிரிவு ஒன்று, மே மாதம் 10 ஆம் திகதி, 56 பேருக்கு தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளைகள் ஆவர்.
அந்த பீட்சாவை சாப்பிட்ட சிறுவர்களுக்கு, மூளை, இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றின் சட்டத்தரணியான Pierre de Buisson என்பவர் தெரிவித்துள்ளார். நெஸ்ட்லே மற்றும் Buitoni நிறுவன மேலாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எப்படி அந்த பீட்சாவில் ஈ.கோலை கிருமி பரவியது என்பது தெரியாத நிலையில், அந்த பீட்சா நிறுவன முன்னாள் பணியாளர் ஒருவர், அந்த தொழிற்சாலையில் சரிவர சுகாதாரம் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஒரு கொலை வழக்கு ( involuntary manslaughter of one person) மற்றும் 14 பேருக்கு உடல் நல பாதிப்பு முதலான குற்றச்சாட்டுகளின் பேரில் பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
பீட்சா சாப்பிட்டதால் ஒருவர் உயிரிழந்து ஏராளமான பிள்ளைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.