பிரபல நிறுவனத்தின் பீட்ஸாக்களில் நோய்க்கிருமிகள்... பிரான்சில் இருவர் உயிரிழந்ததால் பரபரப்பு
பிரான்சில் நெஸ்ட்லே நிறுவனத் தயாரிப்பான உறையவைக்கப்பட்ட பீட்ஸாக்களில் ஈ.கோலை என்னும் கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெஸ்ட்லே நிறுவனத் தயாரிப்பான உறையவைக்கப்பட்ட பீட்ஸாக்களில் இருந்த ஈ.கோலை என்னும் கிருமித் தொற்றால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த கிருமிகளில் சில சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கக்கூடியவையாகும். ஆயுள் முழுமைக்கும் பிரச்சினையை உருவாக்கக்கூடிய இவ்வகைக் கிருமிகள் மரணத்தையும் உருவாக்கக்கூடியவை.
இந்த பீட்ஸாக்கள் சாப்பிட்டது தொடர்பில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களுடைய உயிரிழப்புக்களுக்கு அந்த பீட்ஸாக்கள்தான் காரணமா என்பது உறுதி செய்யப்படாத நிலையில், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Fraîch’Up frozen pizzas என்னும் பீட்ஸாக்களை வாங்கியவர்கள் அவற்றை உண்ணவேண்டாம் என்றும் அவற்றை தூர எறிந்துவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அவை 2022 ஜூன் 1 முதல், 2023 மார்ச் 31 வரையிலான காலாவதி திகதி கொண்டவை ஆகும்.