பிரித்தானியாவில் நெஞ்சுவலியால் சரிந்த ஆம்புலன்ஸ் சாரதி: நோயாளி மற்றும் செவிலியர் செய்த நெகிழ்ச்சி செயல்
பிரித்தானியாவில் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென சரிந்து விழுந்த ஆம்புலன்ஸ் சாரதியை நோயாளியும் செவிலியரும் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் சாரதிக்கு நெஞ்சுவலி
பிரித்தானியாவில் டாமி ஸ்டீவர்ட் என்ற 72 வயது மாற்றுத்திறனாளி நோயாளியை பாஞ்சோரியின் க்ளென் ஓ’டீ மருத்துவமனையில் இருந்து அபெர்டீன் ராயல் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயாராகி கொண்டு இருந்த போது ஷான் மெக்பிரைட் என்ற ஆம்புலன்ஸ் சாரதி திடீர் நெஞ்சுவலியால் சரிந்து விழுந்துள்ளார்.]
இதற்கிடையில் இருக்கையில் அமர வைக்கப்பட்ட நோயாளி டாமி ஸ்டீவர்ட் சத்தம் கேட்டு திரும்பி பார்த்துள்ளார், அப்போது ஆம்புலன்ஸ் சாரதி நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆத்திரத்தில் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதனை கேட்ட மருத்துவமனை கேன்டீன் ஊழியர் ஒருவர் செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோலி-யிடம் தெரிவித்துள்ளார்.
25 நிமிடம் தொடர் சிபிஆர் முதலுதவி
இதையடுத்து ஆம்புலன்ஸ் அருகில் வந்து பார்த்த செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோலி, ஆம்புலன்ஸ் சாரதி சரிந்து கிடப்பதை பார்த்து அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்ததுடன் உடனடியாக முதலுதவி செய்ய தொடங்கியுள்ளார்.
செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோலி உதவிக்கு ஆம்புலன்ஸ் வரும் வரை அதாவது கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை செய்துள்ளார்.
சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் சாரதி ஷான் மெக்பிரைட்-க்கு உதவிகள் கிடைத்ததால் அவர் உயிர் பிழைத்தார்.
இந்நிலையில் தனக்கு சரியான நேரத்தில் உதவிய நோயாளி டாமி ஸ்டீவர்ட் மற்றும் செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோலி-க்கு ஆம்புலன்ஸ் சாரதி ஷான் மெக்பிரைட் நன்றி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |