இறுதிச்சடங்குக்கான கட்டணத்தை செலுத்துங்கள்! பிரான்ஸ் நகர மேயர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பின்னணி
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆல்ப்ஸ் மலையிலேயே உயரமான மலைச்சிகரம் Mont Blanc மலைச்சிகரம் ஆகும்.
அந்த மலைச்சிகரத்தைப் பார்க்க ஆசைப்படாத சாகச விரும்பிகளே இருக்கமுடியாது எனலாம்.
ஆனால், Mont Blanc சிகரத்துக்குச் செல்லவேண்டுமானால், அதற்கு முன் 15,000 யூரோக்கள் டெபாசிட் செய்துவிட்டு, அதற்குப் பின் மலையேறச் செல்லுங்கள் என்கிறார் அந்த மலைச்சிகரத்தின் அடியில் அமைந்திருக்கும் பிரெஞ்சுக் கிராமம் ஒன்றின் மேயரான Jean-Marc Peillex.
மலையேறச் சென்ற ஒருவர் மலையில் உயிரிழந்துவிட்டால் அவரது உடலைத் தேடிக்கண்டுபிடித்து கீழே எடுத்துவர 10,000 யூரோக்கள் செலவாகும் என்றும், அப்படியே இறுதிச்சடங்கையும் செய்துவிடலாம், அதற்கு ஒரு 5,000 யூரோக்கள் செலவாகும் என்றும் கூறும் Peillexஇன் நோக்கம், கோடையில் மலையேற்றத்துக்குச் செல்பவர்களை தடுப்பதேயாகும்.
சொல்லப்போனால், உண்மையாகவே இத்தாலியில் உள்ள Aosta valley என்ற இடத்துக்கு மலையேறச் செல்வோர் மீட்புப் பணிக்கான செலவை ஏற்றுக்கொள்ளவேண்டுமாம். அதே போன்ற ஒரு திட்டத்தை துவக்குவது தொடர்பாக பிரான்சிலுள்ள Saint-Gervais நகர சட்டமன்றம் விவாதம் ஒன்றைத் துவக்க உள்ளதாம்.
ஆகவே, மலையேற்றத்துக்குச் செல்வோர், ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காகவே மேயர் Jean-Marc Peillex இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.