Paytm-ல் Bitcoin வாங்கலாமா? Cryptocurrency வர்த்தகம் குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட தகவல்
டிஜிட்டல் கட்டண முறைகள், இ-காமர்ஸ் மற்றும் நிதி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான Paytm, Cryptocurrency-களை ஆய்வு செய்து வருகிறது.
கிடைத்த ஆதாரத்தின்படி, இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டால், கிரிப்டோகரன்சிகளைச் சுற்றியுள்ள வர்த்தக சேவைகளை தொடங்குவது குறித்து Paytm நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த Paytm தலைமை நிதி அதிகாரி மதுர் தியோரா (Madhur Deora) கூறுகையில், கிரிப்டோகரன்சிகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைகள் தான், Paytm நிறுவனம் இதுவரை தயக்கம் காட்டுவதற்கு முக்கியக் காரணம்.
ஆனால் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துவதற்கு இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள் ஒப்புதல் அளித்தால், நிறுவனம் அதைப் பரிசீலித்து அதை நோக்கி தன்னை விரிவுபடுத்தலாம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கிரிப்டோவுக்கு அதிகாரப்பூர்வமாக தடை இல்லையென்றாலும், அதன் நிலைப்பாடு குறித்து இந்தியா இன்னும் சந்தேக நிலையில் உள்ளது.
Paytm டிஜிட்டல் நாணயத்துடன் முன்னேற, இந்தியா அதை சட்டப்பூர்வமாகக் கருதி அதற்கு முழு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவில் டிஜிட்டல் ஃபைனான்ஸ் துறையில் Paytm மிகப் பெரிய நிறுவனமாக இருப்பதால், அவர்கள் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்யத் தொடங்கும் போது அது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
மார்ச் 2020-ல் கிரிப்டோகரன்சிகள் மீதான தடையை இந்தியா நீக்கியது குறிப்பிடத்தக்கது.