பங்குசந்தையில் திடீர் சரிவைக் கண்ட PayTM! கண்ணீர் விட்டு அழுத பேடிஎம் நிறுவனர்: வெளியான வீடியோ
பேடிஎம் நிறுவன பங்குகள் சரிவைக் கண்டதால், அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ரூபாய் மதிப்பிழப்பிற்கு பின், டிஜிட்டல் சேவையில் பேடிஎம் நிறுவனம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 8-ஆம் திகதி அன்று பங்குகளை வெளியிட்டது. பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டது.
இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்தும் திரட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பங்கு வெளியிடப்பட்டு நவம்பர் 10-ஆம் திகதி அன்று முடிவடைந்தது. இதையடுத்து நேற்று பங்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன. பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்திலேயே சரிவை கண்டது. ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 27 சதவீதம் வரை பங்குகள் சரிந்தன. இதனால் பேடிஎம் பங்குகள் வாங்கிய முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
பங்குகள் பட்டியலிடப்படும் நிகழ்வில் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கலந்து கொண்டு பேசினார்.அப்போது பங்குகள் பட்டியலிடப்பட்ட பின்பு அதிரடியாக சரிவை கண்டதால் அவர் கண்கலங்கினார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.