சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் வெடித்த சர்ச்சை
சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் பிரதிநிதி இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி
நேற்று துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பையை வென்றது.
இதை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிக்கும் விழாவில், ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் மேடைக்கு வந்து வீரர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
பாகிஸ்தான் புறக்கணிப்பு
ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த யாரும் பரிசளிப்பு விழா மேடையில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி, நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதால் கூட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், அவரால் துபாய்க்கு வர முடியவில்லை.
அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமைர் அகமது துபாய் மைதானத்தில்தான் இருந்தார். ஆனால் அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்த செயல் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை அவமதித்து விட்டதாக இந்திய ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அக்தர் விமர்சனம்
இது தொடர்பாக பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், "கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஒரு இந்திய அணியை கண்டேன். கடந்த ஆண்டு டி20 கோப்பை, இப்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்தியா அசத்தியுள்ளது.
ஆனால், போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானை சேர்ந்த யாரும் பரிசளிக்கும் மேடையில் இல்லை. இது எனக்கு ஆச்சரியமாகவும் வினோதமாகவும் இருக்கிறது. கோப்பையை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான் இந்தியாவிற்கு வழங்கியிருக்க வேண்டும்.
This is literally beyond my understanding.
— Shoaib Akhtar (@shoaib100mph) March 9, 2025
How can this be done???#championstrophy2025 pic.twitter.com/CPIUgevFj9
இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது மிகுந்த மனசோர்வை ஏற்படுத்தியுள்ளது" என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்துள்ளார்.
யார் யார் விழா மேடையில் இருக்க வேண்டும் என்பதை ஐசிசி தான் முடிவு செய்கிறது. பாகிஸ்தானின் பிரதிநி மைதானத்தில் இருந்தும் அவரை பரிசளிப்பு மேடைக்கு அழைக்காதது குறித்து ஐசிசியிடம் முறையிட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |