IPL-க்காக PSL-யை கைவிட்ட தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஷ்! PCB நடவடிக்கை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் போஷ் மீது அதிரடி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கார்பின் போஷ் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால், முன்னதாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.//
ஐபிஎல், பிஎஸ்எல் மோதல்
ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் போட்டிகளின் திகதிகள் ஒரே நேரத்தில் வருவதால் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் பிஎஸ்எல் போட்டிகள் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடைபெற உள்ளது.
ஜனவரி மாதம் நடைபெற்ற பிஎஸ்எல் வீரர்கள் ஏலத்தில் பெஷாவர் ஜல்மி அணியால் வைர பிரிவு வீரராக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் போஷ் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
பின்னர், மும்பை அணி வீரராக தேர்வு செய்யப்பட்ட லிசாட் வில்லியம்ஸ் காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக மார்ச் 8 ஆம் திகதி மும்பை அணி கார்பின் போஷை ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதனால் அவர் பிஎஸ்எல் ஒப்பந்தத்தில் இருந்து விலகி ஐபிஎல்-லில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் போஷ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை
போஷின் முகவர் மூலம் அனுப்பப்பட்ட சட்ட அறிவிப்பை பிசிபி உறுதி செய்துள்ளது.
பிஎஸ்எல் ஒப்பந்தத்தை மீறியதற்காக அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கோரப்பட்டுள்ளது.
போஷ் விலகியதால் ஏற்படும் விளைவுகளை பிசிபி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
போஷின் பதில் கிடைத்த பின்னரே இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியும் என்று பிசிபி கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |