பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயலை கிளப்பிய பேச்சு! அதிரடியாக வெளியிடப்பட்ட அறிக்கை
ஆசியக் கோப்பை தொடர் வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறிய கருத்தினால் பாகிஸ்தான் அதிர்ச்சி
ஜெய் ஷாவின் கருத்து தொடர்பில் ஆசிய கிரிக்கெட் சபையிடம் இருந்து இன்றுவரை அதிகாரப்பூர்வ தகவல் அல்லது விளக்கத்தை பெறவில்லை என அறிக்கை வெளியீடு
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படும் என ஆசிய கிரிக்கெட் சபை தலைவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் நாடுகளின் நலனுக்காக ஆசிய கிரிக்கெட் சபை தொடங்கப்பட்டது. தற்போது இதன் தலைவராக ஜெய் ஷா உள்ளார். இவர் பிசிசிஐ-யின் செயலாளருமாகவும் செயல்பட்டு வருகிறார்.
AFP
இந்த நிலையில், மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெய் ஷா, செய்தியாளர்களிடம் கூறிய விடயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதாவது, அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று குறிப்பிட்ட ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அத்துடன் இந்திய அணி ஆசியக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் செல்லாது எனவும் அவர் கூறினார். அவரது இந்த பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயலை கிளப்பியதைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 'அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பையை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் சபை தலைவர் ஜெய் ஷா நேற்று தெரிவித்த கருத்துகளை ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
Reuters
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வாரியம் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் எந்த விவாதமும், ஆலோசனையும் இல்லாமல் அவற்றின் நீண்டகால விளைவுகள் மற்றும் தாக்கங்கள் குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதுபோன்ற அறிக்கைகளின் ஒட்டுமொத்த தாக்கம் ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகங்களை பிளவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டு ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில், இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி நிகழ்வுகளுக்கு பாகிஸ்தானின் இந்திய வருகையை பாதிக்கலாம்.
ஆசிய கிரிக்கெட் சபை தலைவரின் அறிக்கை குறித்து ஆசிய கிரிக்கெட் சபையிடம் இருந்து இன்றுவரை அதிகாரப்பூர்வ தகவல் அல்லது விளக்கத்தை பெறவில்லை.
எனவே, தற்போது ஆசிய கிரிக்கெட் சபை தனது வாரியத்தின் அவசர கூட்டத்தை கூடிய விரைவில் கூட்ட வேண்டும்' என தெரிவித்துள்ளது.