உச்சம் தொட்டுள்ள கொரோனா தொற்று... அச்சத்தில் மருத்துவமனைகள்: சுவிட்சர்லாந்தின் நிலைமை என்ன?
சுவிட்சர்லாந்து ஐந்தாவது கொரோனா அலையை எதிர்கொண்டுள்ளது...
நாளொன்றிற்கு புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை எதிர்பார்ப்பை மீறி எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
சென்ற வார நிலவரப்படி, ஜனவரி 7 அன்று, 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 28,038. தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 291.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ள நிலையில், Omicron வைரஸ் பரவல் காரணமாக, அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். ஐரோப்பாவிலேயே அதிக கொரோனா தொற்று வீதம் உள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.
8.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட சுவிட்சர்லாந்தில் சுமார் 12,000 பேர் இதுவரை கொரோனா தொற்று தொடர்பில் உயிரிழந்துள்ளார்கள்.
கடுமையான கொரோனா தொற்று சூழலைத் தொடர்ந்து, பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. கடந்த டிசம்பர் 20 முதல், தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் மட்டுமே உணவகங்கள், கலாச்சார, பொழுதுபோக்கு அரங்கங்கள் முதலானவற்றிற்குள் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்குள் அமர்ந்துதான் அருந்தவேண்டும், மாஸ்க் அணியவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்தவண்ணம் பணியாற்றும் விதி மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் கூடுவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகள் ஜனவரி 24 வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் அனைவரும் ரயில், ட்ராம், பேருந்து, கேபிள் கார் மற்றும் கப்பல்கள் என எந்த பொதுப்போக்குவரத்தில் பயணித்தாலும் மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானங்களில் பயணிப்போரும் மாஸ்க் அணியவேண்டும். மறுப்போருக்கு அபராதம் விதிக்கப்படும்.
இதுபோக, சில விதிவிலக்குகள் தவிர்த்து, சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைவரும் அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டிருந்தாலும் சரி, அவர்கள் நுழைவு படிவம் ஒன்றை சமர்ப்பிப்பதுடன், கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.