ஆகஸ்டு வரையில் நீடிக்கும்... கனேடிய விமான நிலையம் தொடர்பில் முக்கிய அதிகாரி கருத்து
கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பயணிகளின் வருகை மற்றும் வெளியேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிக்கலானது எதிர்வரும் ஆகஸ்டு மாதம் வரையில் நீடிக்கும் என்றே முன்னாள் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களாகவே ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், அனைத்து சேவைகளும் தாமதமாவதுடன், பயணிகள் வருகையும் புறப்பாடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளும் ஊழியர்கள் பற்றாக்குறையுமே இதற்கு முதன்மை காரணமாக சிலர் கூறுகின்றனர்.
இதனிடையே, ஜூன் மாத இறுதிக்குள் 400 புதிய அதிகாரிகளை நியமனம் செய்ய இருப்பதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா உறுதியளித்துள்ளார்.
ஆகஸ்டு மாதத்திற்கு பின்னர் நிலைமை சீரடையும் என கூறப்பட்டாலும், பாடசாலைகள் செயல்பட தொடங்குவதால் குடும்பமாக பயணப்படுவது முடியாமல் போகும்.
இதனிடையே, அமைச்சர் அல்காப்ரா தமது டுவிட்டர் பக்கத்தில், கனடிய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கனடா முழுவதும் 850 க்கும் மேற்பட்ட புதிய முகவர்களை பணியமர்த்தியுள்ளதாக அறிவித்திருந்தார்.
முன்னதாக ரொறன்ரோவின் தொழிலதிபர்கள் குழு கடந்த மாதம் முன்னெடுத்த சந்திப்பில், பியர்சன் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை கனடா நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.