பிரிஸ்டலில் பேருந்து மோதி முதியவர் மற்றும் நாய் பரிதாபமாக உயிரிழப்பு: 30 வயது ஓட்டுநர் கைது
Pedestrian and Dog Killed in Bristol Bus Collision: பிரித்தானியாவில் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் மற்றும் நாய் ஒன்று பரிதாபமாக பலியாகியுள்ளது.
பேருந்து விபத்து
வியாழக்கிழமை இரவு பிரித்தானியாவில் நிகழ்ந்த பேருந்து மோதிய விபத்தில் முதியவர் மற்றும் அவருடன் இருந்த நாய் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஸ்டாக்வுட் சாலை மற்றும் ஹோல்வே சாலையில் அக்டோபர் 22ம் திகதி இரவு சுமார் 11.10 மணியளவில் இந்த விபத்து சம்பவமானது நடந்துள்ளது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மற்றும் அவருடன் வந்த நாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவரின் அடையாளங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஏவன் மற்றும் சோமர்செட் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து தொடர்பாக பேருந்தை இயக்கிய 30 வயது ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.