பிரித்தானியாவில் பாதசாரிகள் மீது பாய்ந்த கார்: 52 வயது தாய் உயிரிழப்பு, மகள் படுகாயம்
பிரித்தானியாவின் வெஸ்ட்கிளிப் பகுதியில் நடந்த கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
52 வயது பெண் உயிரிழப்பு
வியாழக்கிழமை மாலை, எசெக்ஸில்(Essex) உள்ள வெஸ்ட்கிளிப்பில்(Westcliff) கார் மோதியதில் 52 வயதுடைய ஒரு பெண் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
ஹாம்லெட் கோர்ட் சாலை(Hamlet Court Road) மற்றும் செயிண்ட் ஜான்ஸ் சாலை(St John's Road) சந்திப்பில் மாலை 5:30 மணிக்கு நடந்த இந்த விபத்தின் போது உயிரிழந்த 52 வயதுடைய பெண் தனது 23 வயது மகளுடன் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையை மீறி சென்று, நடந்து சென்ற தாய் மற்றும் மகள் இருவரையும் மோதியதாக எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர சேவை பணியாளர்கள் இரண்டு பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், இருப்பினும் தீவிர சிகிச்சை முயற்சிகள் பலனளிக்காமல் தாய் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.
23 வயதுடைய மகள் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
31 வயதுடைய பெண் கைது
இந்த விபத்துக்கு காரணமாக இருந்த கருப்பு Suzuki Splash காரை ஓட்டி வந்த 31 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, போதைப்பொருள் அல்லது மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்தின் பேரில் சுமத்தப்பட்டுள்ளது.
எசெக்ஸ் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மற்றும் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்த சாட்சிகள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |