போரை நிறுத்த வைத்த பீலேவின் ஆட்டம்: வெளிவராத புதிய தகவல்
கால்பந்தாட்டத்தை உலக அளவில் வியாபிக்க வைத்தவர்களில் ஒருவரான ஜாம்பவான் பீலே, ஒருமுறை தமது ஆட்டத்தால் போரையே நிறுத்த வைத்த சம்பவம் தெரியவந்துள்ளது.
சாண்டோஸ் அணியில் பீலே
பிரேசில் நாட்டின் முகமாக விளங்கிய பீலே வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 1960 காலகட்டத்தில் சாண்டோஸ் அணியில் விளையாடிவந்த பீலே உலகின் பல நாடுகளுக்கு சென்று போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.
@reuters
சாண்டோஸ் அணி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் சென்று விளையாடியுள்ளது. 1969ல் நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தது. அப்போது நட்பு ரீதியான ஆட்டத்திற்காக பீலே மற்றும் அவரது அணி அங்கு சென்றுள்ளது.
பீலேவின் ஆட்டத்தை காண வேண்டும் என்பதாலையே, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இரு தரப்பும் கால்பந்தாட்டத்தை காண திரண்டுள்ளது. 2-2 என்ற கோல் கணக்கில் பீலே அணி சமநிலை பெற்றிருந்தாலும், அந்த இரண்டு கோல்களையும் பீலே அடித்திருந்தார்.
மீண்டும் துப்பாக்கிச் சூடு
ஆனால், ஆட்டம் முடித்து பீலே மற்றும் அவரது அணியினர் அப்பகுதியில் இருந்து வெளியேறியதும் மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியதாக கூறப்படுகிறது.
2020 அக்டோபர் மாதம் இந்த சம்பவம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த பீலே, 1969 ல் நைஜீரியாவில் ஒரு போரை நிறுத்தியது எனது மிகப்பெரிய பெருமைகளில் ஒன்றாகும் என குறிப்பிட்டிருந்தார்.