திருமணம் செய்தால் அபராதமா?: சர்ச்சைக்குரிய வரி தொடர்பில் முடிவு செய்ய சுவிட்சர்லாந்து திட்டம்...
சுவிட்சர்லாந்தில் இருவர் தனித்தனியே இருக்கும்போது செலுத்தும் வரியைவிட, அவர்கள் திருமணம் செய்து தம்பதியராகும்போது கூடுதல் வரி செலுத்தவேண்டியுள்ளது.
அத்துடன், தம்பதியராக இருப்பவர்களுக்கு ஓய்வூதியத் தொகையும் குறைவாகக் கிடைக்கிறது.
சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்தவர்கள் கூடுதல் வரி செலுத்தும் ஒரு நிலைமை உள்ளது.
அதாவது தனித்தனியாக இருவர் சம்பாதிக்கும் வருமானத்தை விட, திருமணம் செய்துகொள்ளும்போது, தம்பதியராக இருவரின் வருமானமும் சேர்த்து மொத்தமாக கணக்கிடும்போது அதிக வருவாய் வருவதால், திருமணம் செய்த தம்பதியர், தாங்கள் தனியாக இருந்தபோது செலுத்தியதைவிட கூடுதல் வரி செலுத்தவேண்டியதாகிறது.
இதை சுவிஸ் மக்கள் திருமண அபராதம் என்று அழைக்கிறார்கள்.
அத்துடன், திருமணம் செய்யாமல் இருப்பவர்களைவிட திருமணம் செய்துகொண்டு வாழும் தம்பதியருக்கு குறைவான ஓய்வூதியமே கிடைக்கிறது.
இப்படி, திருமணம் ஆவதால் அதிக வரி செலுத்தவேண்டிய நிலை, மற்றும் தம்பதியருக்கு குறைவான ஓய்வூதியம் ஆகிய இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்து பல அரசியல்வாதிகள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
தற்போது, Centre Party என்னும் கட்சி இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் பிரேரணைகளை உருவாக்கியுள்ளது.
இந்த பிரேரணைகளுக்கு ஆதரவாக 100,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டால் மட்டுமே அதை வாக்கெடுப்புக்கு விடமுடியும்.
கையெழுத்துக்கள் பெற 2024 மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.