சுவிஸில் ஊக்கத்தொகையாக அடிப்படை மாத வருவாயை பெறவிருக்கும் 500 பேர்
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தெரிவு செய்யப்படும் 500 பேர் ஊக்கத்தொகையாக அடிப்படை மாத வருவாயை பெறவிருக்கின்றனர்.
சுவிஸ் மக்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அடிப்படை வருவாயாக வழங்கும் திட்டமானது எப்போது விவாத பொருளாகவே இருந்து வருகிறது.
சமீபத்தில், கடந்த 2016ல் அவ்வாறான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டதில் சுமார் 75% சுவிஸ் மக்களால் குறித்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் சூரிச் நகரில் குறித்த திட்டத்திற்கு பெருவாரியான ஆதரவு இருந்தது. மாவட்டம் 4 மற்றும் 5-ல் சுமார் 54.7% மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சூரிச் நகரம் தற்போதைய சூழலில் அந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆதரவு தெரிவித்து சுமார் 4,000 பேர் கையொப்பங்கள் இட்டுள்ளனர்.
சூரிச் நகரில் குறைந்தது 500 பேர் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை வருமானத்தைப் பெற வேண்டும் என்று இந்த திட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி அடிப்படை வருவாய் பெறவிருக்கும் அந்த 500 பேர்களை எவ்வாறு தெரிவு செய்வார்கள் எனவும் தகவல் இல்லை.
ஆனால் மிக விரைவில் செயல்முறைக்கு கொண்டுவரப்படும் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.