சுவிட்சர்லாந்தில் போலி தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்போருக்கு கடும் சிக்கல்: சிக்கிய இளைஞர்
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி மையத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் நூற்றுக்கணக்கான போலி சான்றிதழ்களை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் 20 வயதான இளைஞர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குறித்த இளைஞரிடம் இருந்து பெற்ற சான்றிதழ்களை பயன்படுத்தும் மக்களும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றே கூறப்படுகிறது.
போலியான சான்றிதழ்களை பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அல்லது பெருந்தொகை பிழை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மட்டுமின்றி அவர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் குற்றவியல் ஆவணங்களில் இடம்பெறும். மேலும், போலி சான்றிதழ் பெற்றுக்கொண்டவர்கள் மீது, தொற்று நோயை திட்டமிட்டு பரப்புதல், பாதிப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்கு பதியப்படும்.
இந்த விவகாரம் தொடர்பில் கைதான இளைஞர் Schaffhausen நகரில் தடுப்பூசி மையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். ஒவ்வொரு போலி சான்றிதழுக்கும் 400 பிராங்குகள் வரையில் கட்டணமாக வசூலித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் ஐவர் மீதும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறித்த 20 வயது இளைஞர் உட்பட இருவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.