ரத்த காயங்களுடன் உதவி கேட்ட சிறுமி! இரக்கமில்லாமல் வீடியோ எடுத்த மக்கள்- நெஞ்சை உலுக்கிய புகைப்படம்
பாதிக்கப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
குறித்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் படுகாயங்களுடன் விழுந்து கிடந்த சிறுமிக்கு உதவாமல் மக்கள் வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. காணாமல் போன குறித்த சிறுமி அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
அவரை பார்த்த மக்கள் சூழ்ந்துகொண்டு நின்றனர். ஆனால், அச்சிறுமி அவர்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் உதவாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பொலிஸார் அந்த இடத்திற்கு வரும் வரை ஒருவரும் சிறுமிக்கு உதவ முன் வரவில்லை. ஒரு வழியாக அப்பகுதிக்கு வந்த பொலிஸார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருந்தினர் மாளிகை காவலாளி ஒருவர் சிறுமி குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். குறித்த சிறுமியுடன் இளைஞர் ஒருவர் வந்தது விருந்தினர் மாளிகை கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாகவும், அந்த நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுமி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா என்பது குறித்து தெரியவில்லை என்றும், மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்னரே அது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.