கனடாவில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்பு கரைசல்: அடையாளம் காணப்பட்ட 6 பேர்
கனடாவின் யார்க் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, 6 பேருக்கு உண்மையில் உப்பு கரைசல் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை உறுதி செய்துள்ள அதிகாரிகள், அந்த 6 பேரிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 28ம் திகதி தடுப்பூசி மையம் ஒன்றில் 6 பேர்கள் சென்ற நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நீர்த்துப்போகச் செய்ய பயன்படுத்தும் உப்பு கரைசலை தவறுதலாக செலுத்தியுள்ளனர்.
இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை என்றாலும், இவ்வாறான செயல் கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உரிய நேரத்தில் இந்த விவகாரம் கண்டறியப்பட்டு, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நேரத்தில் இந்த நிலைமை ஏற்படுத்திய நிச்சயமற்ற தன்மைக்கும் அக்கறையின்மைக்கும் தாங்கள் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.