வேலைக்காக காலையிலேயே வரிசையில் நிற்கும் மக்கள்... கொரோனாவால் வறுமையில் வாடும் ஒரு பிரெஞ்சு நகரம்
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என உலக நாடுகள் வகைப்படுத்தப்படும் நிலையில், ஒரு காலத்தில் அன்னாந்து பார்க்கப்பட்ட பல நாடுகளையும் இன்று கொரோனாவின் தாக்கம் வறுமைக்குள் தள்ளியுள்ளது.
சமீபத்தில் சுவிஸ் நகரம் ஒன்றில் மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்பது குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். அந்த வரிசையில் பிரான்ஸ் நகரம் ஒன்றும் தடுமாறி வருவதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
Marseille என்ற பிரெஞ்சு நகரத்தில், காலை 8.30 மணிக்கே வேலை வாய்ப்பு மையம் ஒன்றின் முன் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் மக்கள்.
Magalie Garcia என்ற அந்த வேலை வாய்ப்பு மையத்தில் 85 பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு வேலை கோரும் மற்றும் நிதியுதவி கோரும் விண்ணப்பங்களை நிரப்ப உதவுகிறார்கள், வேலைக்கு பயிற்சி அளிக்கிறார்கள் அல்லது வேலை மாற்றத்திற்காக ஆலோசனை அளிக்கிறார்கள்.
வரிசையில் நிற்பவர்களில் பலர் வீடுகளில் கணினி இல்லாதவர்களும், கணினியை இயக்கத் தெரியாதவர்களும்... இந்த ஒரு மையத்தில் மட்டும் 12,000க்கும் அதிகமானோர் வேலை கோரி பதிவு செய்துள்ளார்களாம்.
நான் இரவெல்லாம் தூங்குவதேயில்லை என்கிறார் 52 வயதான Edith Ferrari. அன்றாட வாழ்வு போராட்டமாகிப்போன நிலையில், 30 ஆண்டுகளாக சின்னச் சின்ன வேலைகள் செய்து வருகிறேன், ஆனால், இப்போதெல்லாம் நாளை என்ன நடக்குமோ என்ற பயத்திலும் கவலையிலும் தூக்கமே வருவதில்லை என்கிறார் அவர்.
2021இலாவது ஒரு நல்ல வேலை கிடைக்கும் என நினைத்தேன், ஆனால், இந்த கொரோனா... அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
கண்களில் நிரம்பும் கண்ணீர், வாயில் வார்த்தைகள் வருவதை தடுக்கிறது... கொரோனாவால் கடந்த ஆண்டு பலர் வேலையிழந்துவிட்டார்கள்.
உலகம் முழுவதிலும், 2020இல் மட்டும் 225 மில்லியன் பேர் தங்கள் முழு நேர வேலையை இழந்துவிட்டார்கள்! பிரான்சைப் பொருத்தவரை, அங்கு ஆறு மில்லியன் வேலையிழந்தார்கள்.
வேலைக்கான ஆலோசனை பெற வந்த Baya Dahdah (52), தனக்கு ஆலோசனை கூறும் ஆலோசகரின் அன்பில் நெகிழ்ந்துபோய், எல்லாரும் இப்படி மனிதத்தன்மையுடன் நடந்துகொள்வதில்லை, நீங்கள் மிக அருமையாக செய்கிறீர்கள், உங்களை அணைத்துக்கொள்ளட்டுமா என்று கேட்கிறார்.
அந்த ஆலோசகரோ, அம்மா, எனக்கும் விருப்பம்தான், ஆனால் இந்த பாழாய்ப்போன கொரோனா தடுக்கிறதே என்கிறார். ஆனால், மாதம் ஒன்றிற்கு 900 யூரோக்கள் வருமானம் வரும் ஒரு திட்டம் Dahdahவுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து தன் பதில் அன்பைக் காட்டிவிட்டார் அந்த ஆலோசகர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் முன்பு நல்ல வேலைகளில் இருந்தவர்கள். இந்த கொரோனா பிரச்சினை, சுனாமி போல் வந்து அத்தனை பேருடைய வேலையையும் வாரிக்கொண்டு போய்விட்டது என்கிறார், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மனோவியல் நிபுணராக பணி புரியும் Catherine Tchifteyan என்பவர்.
வேலை போனதால் பயந்து, அதிர்ச்சியடைந்து பலர் bulimia என்ற பிரச்சினைக்கும், போதை பழக்க அடிமைத்தனத்துக்கும் ஆளாகிவிட்டார்கள் என்கிறார் அவர்.
அதேநேரத்தில், Marseille நகர இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு மையங்களின் உதவியுடன் புதிதாக தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு முன்னேறத் துடிக்கிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் சொல்லித்தான் ஆகவேண்டும்.