மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு மக்களுடைய வரிப்பணமா? பிரித்தானியர்கள் எதிர்ப்பு
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா நெருங்கிவரும் நிலையில், முடிசூட்டுவிழாவிற்கு மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்யக்கூடாது என பிரித்தானியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ள கருத்து
The YouGov survey என்னும் சர்வதேச ஆய்வமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிரித்தானியர்களில், 51 சதவிகிதம்பேர் முடிசூட்டுவிழாவிற்கு மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு சுமார் 50 மில்லியன் பவுண்டுகள் முதல் 100 மில்லியன் பவுண்டுகள் வரை செலவாகலாம் என கருதப்படுகிறது.
Pic: AP
காரணம், மறைந்த எலிசபெத் மகாராணியரின் முடிசூட்டு விழாவிற்கு 912,000 பவுண்டுகள், இன்றைய மதிப்பின்படி 20.5 மில்லியன் பவுண்டுகள் செலவாகியுள்ளன.
மக்கள் எதிர்ப்பு
ஆக, மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு மக்களுடைய வரிப்பணம் செலவிடப்படக்கூடாது என ஆய்வில் பங்கேற்ற மக்களில் பெரும்பான்மையினர் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 4,246 பேரில், 18 முதல் 24 வயதுடையவர்களில் 62 சதவிகிதத்தினரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 44 சதவிகிதத்தினரும், 25 முதல் 49 வயது வரையுள்ளவர்களில் 55 சதவிகிதத்தினரும், 50 முதல் 64 வயதுள்ளவர்களில் 46 சதவிகிதத்தினரும், மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு மக்களுடைய வரிப்பணம் செலவிடப்படக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.