பிரெக்சிட்டால் கிடைக்கும் என எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்தனவா? மக்கள் கருத்து
பிரெக்சிட், அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் பிரித்தானியாவுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பித்தான் அதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்தனவா?
பிரெக்சிட்டின் விளைவுகள் குறித்து பிரித்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள், உலகம் என்ன நினைக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

Credit : Reuters
பிரெக்சிட்டால் எதிர்பார்த்த நன்மைகள் நிகழ்ந்தனவா? பிரெக்சிட்டின் விளைவுகள் தொடர்பில், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 27 முன்னணி ஜனநாயக நாடுகளில், Yonder Data Solutions என்னும் அமைப்பு ஆய்வொன்றை மேற்கொண்டது.
பிரெக்சிட் நிகழ்ந்தால், பிரித்தானியாவைக் கட்டுப்படுத்தும் முடிவை பிரித்தானியாவே எடுக்கமுடியும் என்று பிரெக்சிட் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், அது நடந்துள்ளா என்ற கேள்வியை முன்வைத்தபோது, 72 சதவிகித வாக்காளர்கள், இல்லை, முன்னை விட நிலைமை கைமீறிப்போய்விட்டது என பதிலளித்துள்ளார்கள்.
அத்துடன், 66 சதவிகிதம் வாக்காளர்கள், பொருளாதாரம் பிரெக்சிட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.
பிரெக்சிட் வாக்களிப்பு குறித்த பேச்சு வந்தபோது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கவேண்டும், பிரித்தானியா வெளியேறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என சிலர் கூறியபோது, அவர்கள் பயத்தை ஏற்படுத்தும் போலியான ஒரு பிரச்சாரத்தை செய்வதாக பிரெக்சிட் ஆதரவாளர்கள் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைத்தார்கள்.

ஆனால், உண்மையில், பிரெக்சிட்டை எதிர்த்தவர்கள் கூறியது உண்மையாகிவிட்டது என 55 சதவிகித பிரித்தானியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், பிரெக்சிட் நிகழ்ந்தால் புலம்பெயர்தல் பிரச்சினை தீரும் என பிரெக்சிட் ஆதரவாளர்கள் கூறியதை தாங்கள் நம்பியதாகவும், ஆனால், அது நடக்கவில்லை என்றும் 66 சதவிகித வாக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உலக நாடுகளின் கருத்து
சரி, பிரெக்சிட் குறித்து மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஆய்வு முடிவுகள், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்மை இல்லை, அது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருந்திருக்கவேண்டும் என 50 சதவிகித, ஐரோப்பிய வாக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல, ஐரோப்பியர்களில் 66 சதவிகிதம் பேர், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
59 சதவிகிதம் பேர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது தவறு என்பதையே பிரெக்சிட் காட்டுவதாக தெரிவித்துள்ளார்கள்.

Credit : britannica
விடயம் என்னவென்றால், லேபர் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறார். என்றாலும், அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆக, இந்த ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படக்கூடும் என ஊடகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |