ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி...பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு: ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாய் திருமதி அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார்.
அதைக் கனிவுடன் கருத்தில் கொண்டு, விதிகளைத் தளர்த்தி 30 நாள் விடுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு. பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிறை விடுப்பு அளிக்க வேண்டும் என அவரது தாயார் திருமதி @ArputhamAmmal அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.
— M.K.Stalin (@mkstalin) May 19, 2021
அரசு அக்கோரிக்கையை கனிவோடு பரிசீலித்தது.
திரு. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்க ஆணையிட்டுள்ளேன்!
ஸ்டாலினின் இந்த உத்தரவை அறிந்த, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், ஒரு தாயின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும், விரைந்து பரிசீலனை செய்து, பேரறிவாளனின் உடல்நிலை உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு, உடனே விடுப்பு வழங்கிய ஸ்டாலினுக்கு, அவர் உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது,.