அற்புதம்மாளின் வாழ்க்கையை படமாக்க விரும்புகிறேன்: இயக்குநர் வெற்றிமாறன்
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாவின் போராட்ட வாழ்க்கையை படமாக்க விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் இந்த அறைவிப்பு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று (மே 18) உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு விடுதலை அறிவித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
விடுதலைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், தனது அம்மாவின் தியாகம் மற்றும் சட்டப் போராட்டம் மற்றும் என் குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி தான் இந்த தீர்ப்பு. அம்மா ஆரம்ப காலங்களில் அவமானங்கள், புறக்கணிப்புகளை சந்தித்து இருந்தார். இந்த வேதனைகளை கடந்த 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடி இருந்தார்கள். அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார்.
மேலும், தங்கை செங்கொடியின் அர்ப்பணித்து தியாகம் அளப்பரியது. எனது விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் உதவியிருக்கிறார்கள். என் விடுதலைக்காக போராடிய அனைவரையும் நேரம் கிடைக்கும் போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளின் வாழ்க்கையை படமாக்க விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து பேசிய அவர், பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளின் வாழ்க்கையை படமாக்க விரும்புவதாகவும், ரொம்ப மும்முரமாக அதில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். ஒரு தாயின் போராட்டம், நாட்டினுடைய வரலாறும் இதில் இருக்கிறது, 32 காலமாக நடக்கும் ஒரு தாயுடைய போராட்டத்தை காட்சிப்படுத்துகிறது. இது மிகவும் சவாலானது.
அற்புதம் அம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கூட முடிவு செய்துவிட்டதாகவும், அதனை சீக்கிரம் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெற்றிமாறன் அற்புதம் அம்மாளின் படத்தை கூடிய விரைவில் இயக்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.