கனேடிய ஆயுதப் படை சட்டத்தில் புதிய திருத்தம்: நிரந்தர குடியுரிமையாளர்கள் இராணுவத்தில் சேர அனுமதி!
கனடாவில் தற்போது நிரந்தர குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தவர்கள் கனேடிய ராணுவத்தில் சேவை புரியலாம் என அந்த நாட்டின் ஆயுதப்படை அறிவித்துள்ளது.
நிரந்தர குடியுரிமையாளர்கள் ராணுவத்தில் சேர அனுமதி
கனேடிய ஆயுதப் படைகள் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், கனடாவில் நிரந்தரமாக குடியுரிமை பெற்றவர்கள் ராணுவத்தில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ராணுவத்தின் பயிற்சி செலவைக் குறைக்கும் அல்லது சிறப்புத் தேவையை பூர்த்தி செய்யும், பயிற்சி பெற்ற விமானி அல்லது மருத்துவர்களே திறமையான இராணுவ வெளிநாட்டு விண்ணப்பதாரர் (SMFA) என்ற நுழைவுத் திட்டத்தின் கீழ் இராணுவ சேவையில் பணியாற்ற முடியும்.
தற்போது இராணுவ விதிகளின் படி, வேட்பாளர்கள் கனேடிய குடிமக்களாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 18 வயது அல்லது பெற்றோர்களின் ஒப்புதல் இருந்தால் 16 வயது போதுமானது. மற்றும் அவர் ராணுவ அதிகாரியாக பணியாற்ற விரும்புகிறாரா என்பதை பொறுத்து அவர் 10 அல்லது 12ஆம் வகுப்பு கல்வியை முடித்து இருக்க வேண்டும், இதே விதிகள் நீண்ட கால குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்திற்கான செப்டம்பர் மாத ஆள்சேர்ப்பு ஆயிரக்கணக்கில் பற்றாக்குறையை சந்தித்ததை தொடர்ந்து கனேடிய ஆயுதப் படைகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Shutterstock
அத்துடன் 5,900 புதிய வீரர்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் ராணுவத்தில் இணைக்க வேண்டும் என்ற இலக்கிற்கான மாத ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் பாதி இலக்கை மட்டுமே அடைய முடிந்ததாலும் இந்த அறிவிப்பு வெளி வந்து இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உக்ரைன் போர் விளைவாக கனடாவும் உலகளாவிய கோரிக்கைகளை பூர்த்தி செய்ய தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க முயற்சிக்கும் காரணி இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பால் உலகளாவிய கோரிக்கையை பூர்த்தி செய்ய கனேடிய ஆயுதப் படைகள் வளரவேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்தியர்களுக்கு அதிக வாய்ப்பு
கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் கனேடிய ராணுவத்தில் சேவை புரியலாம் என்ற அறிவிப்பு மூலம் புலம்பெயர்ந்த இந்தியர்கள் பலர் ராணுவத்தில் இணைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 1 லட்சம் இந்தியர்கள் 2021ம் ஆண்டில் மட்டும் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர், அத்துடன் கனடாவிற்கு வருகை தருபவர்களில் 5ல் ஒருவர் இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.