ஜேர்மனியில் பள்ளி வளாகத்தில் நுழைந்த துப்பாக்கிதாரி: பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல்
வடக்கு ஜேர்மனியில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் திடீரென்று நுழைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹாம்பர்க், ஜென்ஃபெல்டில் உள்ள ஓட்டோ ஹான் பள்ளி இந்த விவகாரம் தொடர்பில் தற்போது மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறப்பு விசாரணை அதிகாரிகள் குறித்த பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் பள்ளி வளாகத்தில் நுழைந்துள்ளதாகவே முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பள்ளி வளாகம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பொலிஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயுததாரி இளைஞர் பள்ளி வளாகத்தினுள் நுழைந்தாரா அல்லது, அந்த வழியாக சென்றாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை எனவும், ஆனால் தீவிர சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பொருட்டு, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட பகுதியில் ஒன்று கூடும் படியும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பள்ளி வளாகத்தில் பொலிசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.