வெட்டப்பட்ட மனிதத் தலையுடன் ஜேர்மன் நீதிமன்ற வாசலில் உட்கார்ந்திருந்த நபர்... வழக்கில் எதிர்பாராத திருப்பம்
ஜேர்மன் நீதிமன்றம் ஒன்றின் வாசலில் வெட்டப்பட்ட மனிதத் தலை ஒன்றுடன் ஒருவர் உட்கார்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியின் Bonn நகரில், மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில் வந்த ஒரு நபர், மனிதத் தலை ஒன்றை நீதிமன்ற வாசலில் வைத்துவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்துகொண்டார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக பொலிசாரை அழைக்க, உடனடியாக அவரை கைது செய்தனர் பொலிசார்.
இத்ற்கிடையில், அவர் கைது செய்யப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தொலைவில், நதிக்கரை ஒன்றில், தலையில்லாத ஒரு உடலை பொலிசார் கைப்பற்றினார்கள்.
இந்நிலையில், அந்த உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்தியபோது, உயிரிழந்த அந்த நபர் இயற்கை மரணம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவர் பயங்கர நோய் ஒன்றின் காரணமாக உயிரிழந்திருந்தார்.
ஆக, நீதிமன்ற வாசலில் உட்கார்ந்திருந்த அந்த நபர் தலையை வெட்டியதால் அவர் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதால், அவர் மீதான கொலை வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது என பொலிசார் கூறியுள்ளார்கள்.
ஆனாலும், இறந்த உடலை அவமதித்த குற்றத்திற்காக அந்த நபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அந்த நபர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கொல்லப்பட்டவர் மற்றும் கைது செய்யப்பட்டவர் குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படாத நிலையில், அவர்கள் இருவருமே வீடில்லாமல் தெருவில் வாழ்பவர்கள் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.