அவசர உதவி எண்ணில் கோளாறு... ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த நபர்: பிரான்ஸ் தொலைபேசி நிறுவனத்துக்கு சம்மன்
பிரான்சில் தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மக்கள் அவசர உதவியை அழைக்க முடியாமல் திணறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, நெட்வொர்க் பிரச்சினை ஒன்றின் காரணமாக மக்களால் பொலிஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை முதலான அவசர உதவி எண்களை அழைக்க முடியாத ஒரு பிரச்சினை பிரான்சில் ஏற்பட்டது.
இந்த பிரச்சினையைத் தொடர்ந்து, தொலைக்கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவருக்கு பிரான்ஸ் அரசு சம்மன் அனுப்பியுள்ளது. தொலைக்கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை நேற்று பல மணி நேரம் நீடித்த நிலையில், மேற்கு Morbihan பகுதியில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவசர உதவி எண்ணில் பிரச்சினை ஏற்பட்டிருந்ததால், அவரால் அவசர உதவியை அழைக்க இயலவில்லை.
அதனால் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சரான Gérald Darmanin, அந்த மரணத்துக்கு இந்த தொலைபேசி பிரச்சினையால் ஏற்பட்ட தாமதம்தான் காரணமா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், அவசர உதவியை அழைத்த பலர், பல முறை அழைத்தும் தங்களால் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ள இயலவில்லை என தெரிவித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் .
கடல் கடந்த பிரதேசமான La Réunion பகுதியிலும் இந்த பிரச்சினை காரணமாக இதய பிரச்சினையால் அவதியுற்ற இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
இது ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு சீரியஸான தவறு என்று கூறியுள்ள Darmanin, பிரான்சின் மிகப்பெரிய தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனமான Orange நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Stephane Richard தனது அமைச்சகத்துக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று காலை, பொலிஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறைக்கான எண்கள்,
மற்றும் பிற அவசர உதவிகளுக்காக அழைக்கப்படும் 112 ஆகிய அனைத்து தொலைபேசி
எண்களும் சீராக இயங்கத் தொடங்கிவிட்டன.