பிரித்தானிய மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபர் ... ஒரு அதிர்ச்சி வீடியோ!
பிரித்தானிய மகாராணியாருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்னாப்சாட்டில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், கையில் அம்பெய்யும் கருவி ஒன்றை வைத்திருக்கும் நபர் ஒருவர், 1919இல் இந்தியாவிலுள்ள அமிர்தரஸ் என்ற இடத்தில் இந்தியர்கள் பிரித்தானிய படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக, பிரித்தானிய மகாராணியாரை கொலை செய்யப்போவதாக கூறுகிறார்.
இதற்கிடையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று, காலை விண்ட்சர் மாளிகையின் அருகில் மர்ம நபர் ஒருவர் நடமாடுவதை CCTVகமெரா மூலம் கவனித்த பாதுகாவலர்கள் விரைந்து சென்று அந்த நபரைக் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தின் அருகில் அம்பெய்யும் கருவி (crossbow) ஒன்றும் கிடைத்துள்ளது.
அவரைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நேரத்தில்தான், அதாவது அந்த மர்ம நபர் விண்ட்சர் மாளிகையில் கைது செய்யப்படுவதற்கு 24 நிமிடங்களுக்கு முன்பு, காலை 8.06 மணிக்கு ஸ்னாப்சாட்டில் மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும், வீடியோவில் காணப்படும் நபரும் ஒருவர்தான் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அதை இன்னமும் பொலிசார் உறுதி செய்யவில்லை.
வீடியோவில் முகத்தை மறைக்கும் வகையில் உடையணிந்து காணப்படும் அந்த நபர், ’நான் செய்த மற்றும் செய்யப்போகிற விடயங்களுக்காக வருந்துகிறேன். நான் பிரித்தானிய மகாராணியாரான எலிசபெத் மகாராணியாரைக் கொலை செய்ய முயற்சி செய்யப்போகிறேன். 1919ஆம் ஆண்டு, ஜாலியன்வாலாபாகில் கொல்லப்பட்டவர்களுக்காக பழிக்குப் பழி வாங்குவதற்காக இதைச் செய்யப்போகிறேன்’ என்று கூறுகிறார் அந்த நபர்.
அத்துடன், ‘தங்கள் இனத்துக்காக கொலைசெய்யப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், பாகுபாடு காட்டப்பட்டவர்கள் ஆகியோருக்காக பழி வாங்குவதற்காகவும் இதைச் செய்கிறேன். நான் ஒரு இந்திய சீக்கியர். என் பெயர் Jaswant Singh Chail, அதை நான் Darth Jones என்று மாற்றிக்கொண்டேன்’ என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அரணமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாலியன்வாலாபாக் படுகொலை என்பது, 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் திகதி, இந்தியாவிலுள்ள அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில், தங்கள் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, அமைதியாக கூடியிருந்த மக்கள் மீது ரெஜினால்ட் டையர் என்ற பிரித்தானிய பிரிகேடியர் ஜெனரல் துப்பாக்கியால் சுட உத்தரவிட, இராணுவ வீரர்கள் குடும் மழை பொழிய, 379 பேர் கொல்லப்பட, 1,200 பேருக்கு காயத்தை ஏற்படுத்திய ஒரு பயங்கர சம்பவமாகும்.