சுவிஸில் எரிந்து மொத்தமாக சேதமான பண்ணை: விவசாயி மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய Peta
சுவிட்சர்லாந்தில் விவசாயி ஒருவரின் பண்ணை தீ விபத்தில் சிக்கி மொத்தமாக சேதமடைந்துள்ள நிலையில், அந்த விவசாயி மீது குற்றவியல் நடவடிக்கை கோரியுள்ளது விலங்கு நல அமைப்பான Peta.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் Cortébert பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பண்ணை ஒன்று தீ விபத்தில் சிக்கியதில், 50 கன்றுகள் பலியாகின.
இந்த நிலையில் விலங்கு நல அமைப்பான Peta, தொடர்புடைய விவசாயி மீது குற்றவியல் நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளது.
அதில், குறித்த பண்ணையில் தீ விபத்து தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், சம்பவத்தின்போது கன்றுகள் வேதனையில் மூச்சுத் திணறல் அல்லது உயிருடன் எரிந்து கொல்லப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இது புதிதான வழக்கு அல்ல என குறிப்பிட்டுள்ள விலங்கு நல அமைப்பு, அரசியல்வாதிகள் செயல்பட்டு சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் மக்கள் புலால் உண்ணுவதை கைவிட்டாலே, இதுபோன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, பாதிக்கப்பட்ட விவசாயியை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி, அவரது இழப்பில் தங்களாலான உதவியை செய்யவும் அப்பகுதி மக்கள் முன்வந்துள்ளனர்.