இந்திய வம்சாவளி கர்ப்பிணிப்பெண் உட்பட 700 பேர் மீது தவறாக குற்றம் சாட்டிய பெண்: புகார் மனுவில் அரை மில்லியன் பிரித்தானியர்கள் கையெழுத்து
இந்திய வம்சாவளி கர்ப்பிணிப்பெண் உட்பட, 700 பேர் பணம் கையாடல் செய்ததாக தவறாக குற்றம் சாட்டி, அவர்களில் பலர் சிறை செல்லவும், சிலர் தற்கொலை முடிவை எடுக்கவும் காரணமாக இருந்த தபால் நிலையத் தலைவருக்கு அளிக்கப்பட்ட பிரித்தானியாவின் உயரிய விருதைத் திரும்ப பெறக் கோரி உருவாக்கப்பட்டுள்ள புகார் மனுவில், அரை மில்லியன் பிரித்தானியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
சிறையிலடைக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண்
சீமா மிஸ்ரா, தபால் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிவந்த நிலையில், 74,000 பவுண்டுகளை திருடிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டது சீமா மட்டுமல்ல. அவருடன் பணியாற்றிய 700 தபால் அலுவலக பணியாளர்கள், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்தவர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்கள். அவர்களில் சீமாவும் ஒருவர். ஆனால், தான் கர்ப்பிணியாக இருந்ததால்தான் தன்னால் தற்கொலை செய்யமுடியவில்லை என்று கூறியிருந்தார் சீமா.
நடந்தது என்ன?
உண்மை என்னவென்றால், தபால் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் Horizon என்னும் சாஃப்ட்வேரின் பிரச்சினையால்தான் இந்த தபால் அலுவலக ஊழியர்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த உண்மை 2019ஆம் ஆண்டுதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. என்றாலும், 2021ஆம் ஆண்டு சீமா குற்றமற்றவர் என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதைத் திரும்ப பெறக் கோரி புகார் மனு
அந்த தவறுகளின் பின்னால் இருந்தவர், அல்லது, அந்த காலகட்டத்தில் தபால் நிலைய தலைவராக இருந்தவர் Paula Vennells என்னும் பெண். அவருக்கு பிரித்தானியாவின் உயரிய விருதான Order of the British Empire என்னும் விருது வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணமாக இருந்ததால், அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த உயரிய விருதைத் திரும்ப பெறவேண்டும் என்று கோரி 38 Degrees என்னும் அமைப்பு ஒன்லைனில் புகார் மனு ஒன்றை உருவாக்கியுள்ளது.
தொலைக்காட்சித் தொடர் ஏற்படுத்திய எழுச்சி
இந்நிலையில், தபால் நிலைய ஊழியர்கள் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, Mr Bates vs The Post Office என்னும் தொலைக்காட்சித் தொடர் திங்கட்கிழமை வெளியானது.
அந்தத் தொடர் மூலம் உண்மையை அறிந்து கொண்ட மக்கள் கொந்தளித்தனர். உடனடியாக, மக்கள் 38 Degrees என்னும் அமைப்பு ஒன்லைனில் உருவாக்கிய புகார் மனுவில் கையெழுத்திட ஆரம்பித்தனர்.
தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பான முதல் நாளே 1,000 பேர் கையெழுத்திட, தொடரின் கடைசி எபிசோட் வெளியான வியாழனன்று, அந்த புகார் மனுவில் 350,000 கையெழுத்திட்டிருந்தனர்.
தற்போது, Paula Vennellsக்கு வழங்கப்பட்ட பிரித்தானியாவின் உயரிய விருதான Order of the British Empire என்னும் விருதைத் திரும்பப் பெறக்கோரி, அந்த புகார் மனுவில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர், அதாவது, 600,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |