தொடர்ச்சியாக முதியவர்கள் பிட்காயின் இயந்திரத்தை பயன்படுத்த வந்ததால் சந்தேகமுற்ற பெட்ரோல் நிலைய உரிமையாளர்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
கனடாவில் பெட்ரோல் நிலையம் ஒன்றை நடத்தும் இளைஞர் ஒருவர், பிட்காயின் மோசடியில் சிக்கவிருந்த கனேடிய முதியவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.
தனது பெட்ரோல் நிலையத்துக்கு வந்த முதியவர் ஒருவர் யாரிடமோ காரசாரமாக விவாதித்துக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார் அமர்ஜீத் சிங்.
அவர் ஒன்ராறியோவிலுள்ள Belle River என்ற இடத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அந்த முதியவர் சத்தமாக தன் மொபைலில் விவாதித்துக்கொண்டிருப்பதைக் கண்ட சிங், அவரிடம் சென்று என்ன பிரச்சினை என்று கேட்டிருக்கிறார். முதலில் அந்த முதியவர் உன் வேலையைப் பார் என்று சொல்லிவிட்டாராம். பிறகு சிங் தான் அதே பெட்ரோல் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், ஏதோ பிரச்சினை போல் தோன்றியதால் உதவிக்கு வந்ததாகவும், தன்னை நம்பி என்ன பிரச்சினை என்பதைக் கூறுமாறும் கேட்க, அந்த முதியவர் இறங்கி வந்திருக்கிறார்.
தான் ஒரு மோசடியில் சிக்கியிருப்பதாக தெரிவித்த அந்த முதியவர், சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றில் தான் சிக்கியிருப்பதாக குற்றம் சாட்டப்ப்பட்டு மொபைலில் தன்னை அழைத்த பொலிசார் 6,000 டொலர்கள் அபராதம் செலுத்தக் கட்டாயப்படுத்துவதாகவும், அதுவும் பிட்காயினாக செலுத்துமாறு வற்புறுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.
அவரிடமிருந்து சிங் மொபைலை வாங்கிப் பேச, அந்தப் பக்கம் பேசியவர் உண்மையில் பொலிசார் அல்ல என்பதைப் புரிந்துகொண்ட சிங், அந்த முதியவரிடம், இது உண்மையில்லை மோசடி என்பதைப் புரியவைத்து, பணம் செலுத்துவதிலிருந்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார். ஆனால், தான் ஏற்கனவே 975 டொலர்கள் செலுத்திவிட்டதாக தெரிவித்திருக்கிறார் அந்த முதியவர்.
இதேபோல், ஒன்றல்ல இரண்டல்ல, 12 முதியவர்கள் வந்திருக்கிறார்கள். அத்தனை பேரையும் காப்பாற்றி விட்ட சிங், பொலிசாருக்கும் தகவலளித்திருக்கிறார்.
அத்துடன், தனது பெட்ரோல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்காயின் இயந்திரத்தில், ’யாராவது பொலிஸ் அல்லது எல்லை அதிகாரிகள் என்ற பெயரில் பிட்காயின் அனுப்பச் சொன்னால் அனுப்பாதீர்கள். அது மோசடி அழைப்பு’ என்று ஒரு பெரிய நோட்டீசும் ஒட்டிவைத்திருக்கிறார் சிங்.
மேலும், தனது பெட்ரோல் நிலையத்துக்கு வரும் முதியவர்கள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுமாறு தனது பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றுபவர்களிடமும் சொல்லிவைத்திருக்கிறாராம் அவர்.