உக்ரைன் போரால் உயர்ந்துள்ள பெட்ரோல் விலை: மாற்று ஏற்பாட்டுக்காக போரிஸ் ஜான்சன் எடுத்துள்ள சர்ச்சைக்குரிய முடிவு?
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதன் தாக்கத்தை மற்ற நாடுகளும் உணரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீஸல் விலை பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எரிபொருளுக்காக, அதாவது கச்சா எண்ணெய்க்காக ரஷ்யாவை நம்பியிருப்பதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்வதற்காக பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ளதாக கூறப்படும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போரிஸ் ஜான்சன், எண்ணெய் விலையைக் குறைப்பது தொடர்பாக சவுதி அரேபியாவின் உதவியை நாடுவதற்காக அந்நாட்டுக்குச் செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குக் காரணம், சவுதி அரேபியா, தீவிரவாதம் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, சமீபத்தில் 81 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
அவர்களில் சிலர் சிறுவர்களாக இருந்தபோது செய்த குற்றங்களுக்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள மனித உரிமை அமைப்புகள் இந்த பயங்கர செயலை வன்மையாக கண்டித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், அப்படி கொடூரமாக 81 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள சவுதி அரேபியாவிடம் உதவி கேட்க போரிஸ் ஜான்சன் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளதால், சர்ச்சை உருவாகியுள்ளது.
ஆனால், போரிஸ் ஜான்சன் சவுதி அரேபியா செல்லும் தகவலை உறுதி செய்ய மறுத்த பிரதமர் இல்லம், ஆனால், அவர் 81 பேர் மரண தண்டனை தொடர்பில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் பிரச்சினையை எழுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான Julian Lewis, ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதை குறைக்கும் முயற்சியில், பிரித்தானியா மற்றொரு நம்பத்தகாத, சில நேரங்களில் கொடூரமாக நடந்துகொள்ளும் ஒரு நாட்டை முழுமையாக சார்ந்திருக்கும் நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.