ஒமைக்ரான் வைரஸிற்கு மாத்திரை! வெளியான மகிழ்ச்சி தரும் தகவல்
உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸில் இருந்து தப்பிக்க, தங்களுடைய பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால், அதன் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று பைசர் நிறுவன சி.இ.ஓ ஆல்பர்ட் போர்லா கூறியுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பைசர் நிறுவனம், கொரோனா பரவலில் இருந்து தப்பிப்பதற்கு, Paxlovid என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.
கொரோனா அறிகுறிகள் கொண்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை கொடுப்பதன் மூலம் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஐந்து நாட்கள் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இந்த மாத்திரையை கொடுத்தால், கொரோனா ஆபத்து 88 சதவீதம் குறைந்துவிடுவது, பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இந்த பரிசோதனைக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2,246 பேருக்கு, இந்த மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 0.7 சதவீதம் பேர் மட்டுமே 28 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த மாத்திரை நல்ல செயல்திறனுடன் இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா இது குறித்து நேற்று கூறுகையில், Paxlovid மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.