மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் கோடிக்கணக்கான பணம்: ஒரு பகீர் தகவல்
Pharma companies pay millions to doctors: மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் ஆய்வகங்களை நடத்துபவர்களுக்கு, மருந்துகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனை கிட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பணம் மற்றும் பரிசுகள் கொடுப்பதைக் குறித்து அரசல் புரசலாக செய்திகள் அவ்வப்போது வெளியாவதுண்டு.
இந்த விடயம், மருத்துவமனைகளில் பணி செய்பவர்கள் பலருக்கு தெரிந்த விடயம். என்றாலும், அதிகாரப்பூர்வமாக அவை குறித்த செய்திகள் வெளியானதில்லை!

இந்நிலையில், Der Beobachter என்னும் சுவிஸ் ஊடகம், இந்த திடுக்கிடவைக்கும் விடயம் குறித்த பகீர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கும் நிறுவனங்கள்
அதாவது, தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக, இந்த நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு பணம் கொடுக்கின்றன.
அதுவும், கொஞ்சம் நஞ்சமல்ல, கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் மட்டும், மருத்துவர்களுக்கு 234 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு முதல், 60க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இப்படி மருத்துவர்களுக்குக் கொடுத்த தொகை, சுமார் 2.1 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள். இலங்கை மதிப்பில் அது 84,92,87,75,65,19,999.90 ரூபாய்!
அது மட்டுமின்றி, தங்கள் நிறுவனத்திலேயே பலதரப்பட்ட மருந்துகள் தயாரிக்கப்படும் நிலையில், இப்படி பணம் வாங்கும் மருத்துவர்களிடம், தங்கள் நிறுவன மருந்துகளின் விலையுயர்ந்த மருந்துகளை பரிந்துரைக்க இந்த நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன.
அதாவது, அதே மருந்து ஒரு பெயரில் விலை குறைவாகவும், இன்னொரு பெயரில் விலை அதிகமாகவும் விற்கப்படும் நிலையில், விலையுயர்ந்த மருந்தை பரிந்துரைக்க வலியுறுத்தப்படுகின்றது.
அத்துடன், இந்த மருத்துவர்கள், மருத்துவ வழிகாட்டல்களுக்கு மாறாக, அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள்.
இப்படி மருத்துவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கொடுத்து தங்கள் மருந்துகளை விற்பனை செய்ய வலியுறுத்தும் நிறுவனங்களில் முதலிடம் பிடித்துள்ள நிறுவனங்கள், கோவிட் காலகட்டத்தில் சர்ச்சைக்குள்ளான ஆஸ்ட்ரோசெனகா, நோவார்ட்டிஸ், ரோச் மற்றும் பைஸர் ஆகிய நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.