இவ்வளவு வளர்ந்த நாடான கனடாவில் மருந்தகம் ஒன்று செய்த ஏற்றுக்கொள்ளத்தகாத செயல்... அதிகாரிகள் நடவடிக்கை
ஒரு காலத்தில், வளரும் நாடுகளில், ஊசி போட பயன்படுத்தும் சிரிஞ்சை கழுவி, கிருமி நீக்கம் செய்து, அதாவது கொதிக்கவைத்து அல்லது இட்லி பாத்திரம் போன்ற ஒரு பாத்திரத்தில் வைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு சூடாக்கி, பிறகு அதை மீண்டும் மற்றொரு நோயாளிக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்தது.
ஆனால், வளர்ந்த நாடாகிய கனடாவில் உள்ள மருந்தகம் ஒன்றில், ஒரு முறை பயன்படுத்திய ஊசியை, அதுவும், கொரோனா தடுப்பூசி போட பயன்படுத்திய ஊசியை, மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Corinn Jockisch (35) என்ற பெண்ணுக்கு சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. உடனடியாக மருத்துவமனை ஒன்றிற்கு செல்லுமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, New Westminsterஇலுள்ள மருந்தகம் ஒன்றில் Corinn தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அந்த மருந்தகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், ஒரே ஊசியை பயன்படுத்தி பலருக்கு தடுப்பூசி போட்டிருக்கிறார்.
ஆகவே, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, மஞ்சள் காமாலை, ஹெச்.ஐ.வி முதலான தொற்று ஏதேனும் உருவாகியுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக இரத்தப்பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அந்த மருந்தக ஊழியர் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்திய விடயம் தெரியவந்ததையடுத்து, அந்த மருந்தகத்திற்கு தடுப்பூசி வழங்க அளிக்கப்பட்டிருந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதாவது, இனி அந்த மருந்தகம் கொரோனா தடுப்பூசி வழங்காது.
மேலும், அந்த மருந்தக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். (ஒரே ஆறுதல் என்னவென்றால், அவர் ஊசியின் முனையை (needle) பயன்படுத்தாமல் சிரிஞ்சை பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான்).
இதற்கிடையில், அந்த மருந்தகத்தில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவருக்கும் அதிகாரிகள் தகவல் அனுப்பி, அவர்களை இரத்தப்பரிசோதனைகள் செய்யவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
Corinn, தனக்கு ஏதாவது தொற்று உருவாகியுள்ளதா என்பதை அறிவதற்காக இரத்தப்பரிசோதனைகள் செய்து அவற்றிற்கான முடிவுகள் வருவதற்காக காத்திருக்கிறார்.