அமெரிக்காவை உலுக்கிய இன்னொரு விமான விபத்து... தீப்பந்தாக மாறிய விமானம்
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடந்த இன்னொரு கோர விமான விபத்தில் இதுவரை 6 பேர்கள் உடல் கருகி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புறப்பட்ட 30 நொடிகளில்
நடுவானில் தீப்பந்தாக மாறிய விமானத்தால், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளும் தீக்கிரையாகியுள்ளது. தகவலையடுத்து அவசர சேவைகள் அனைத்து பிரிவினரும் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானமானது மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் குட்டி விமானம் என்றும், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் 6 மணியளவில் பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நொடிகளில் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன் பகுதியில் 67 பேர் கொல்லப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், இதுவரை 6 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது.
பலியானவர்களில், அந்த விமானத்தில் பயணப்பட்ட இருவரும் அடங்குவார்கள் என்றே கூறப்படுகிறது. விமான விபத்தை அடுத்து காட்மேன் அவென்யூ மற்றும் ரூஸ்வெல்ட் பவுல்வர்டு பகுதியில் ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு பிலடெல்பியா
இது வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ஒரு பகுதியாகும். வெளிவரும் தகவலின் அடிப்படையில், ஏராளமானோர் மீட்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன் டசின் கணக்கான தீயணைப்பு வாகனங்களும் சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளது.
சம்பவப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பல தீக்கிரையாகியுள்ளது. இந்த விபத்தானது வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து 3 மைல் தொலைவில் நடந்துள்ளது.
இந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மாலை 6:06 மணிக்கு ஒரு சிறிய ஜெட் விமானம் புறப்பட்டு, 1,600 அடி உயரத்திற்கு ஏறியதும் சுமார் 30 வினாடிகளுக்குப் பிறகு ரேடாரில் இருந்து மறைந்ததை விமானத் தரவுகள் காட்டியுள்ளன. இதனையடுத்தே விமானம் தீப்பந்தாக மாறியது என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |