சுவிஸ் நாட்டவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள்: ஒரு வித்தியாசமான மோசடி
சுவிட்சர்லாந்தில் முதியவர்களைக் குறிவைத்து பலவகையில் ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் மோசடியாளர்கள்.
முதியவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு
சூரிச் மாகாணத்திலுள்ள Winterthur நகரில் வாழும் 74 வயது முதியவர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர், தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்றும், அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக பணம் செலுத்தவேண்டும் என்றும் அவரை அவசரப்படுத்தியுள்ளார்கள்.
Pixabay
அடுத்து மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இப்படியே தொடர்ச்சியாக பலர் தங்களை பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி உடனடியாக பணம் செலுத்தும்படி வற்புறுத்த, மகள் கைது செய்யப்பட்டதாக எண்ணி அதிர்ச்சியிலிருந்த அந்த முதியவர், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, அவர்கள் சொன்னதுபோலவே இரண்டு நாட்கள் தொடர்ந்து பலமுறை பணம் அனுப்பியிருக்கிறார்.
பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்ட விடயமே அவருக்குத் தெரியவந்துள்ளது.
இப்படி ஒரு மோசடி நடப்பது குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ள பொலிசார், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், அழுத்தம் கொடுக்கப்படும்போது எந்த முடிவையும் உடனடியாக எடுக்கவேண்டாம் என்றும், சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பொலிசாரை அழைக்குமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.