Pegasus விவகாரம்... உளவு பார்க்கப்பட்ட துபாய் இளவரசி
பிரான்ஸ், இந்தியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள Pegasus உளவு விவகாரத்தில் துபாய் இளவரசியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாண ஆட்சியாளரின் மகள் மற்றும் முன்னாள் மனைவியின் மொபைல் இலக்கங்கள் Pegasus உளவு விவகாரத்தில் சிக்கியிருப்பது வெளிவந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் Pegasus உளவு விவகாரத்தில் சிக்கியிருந்தது சமீப நாட்களில் அம்பலாமனது.
இந்த நிலையில், துபாய் இளவரசி லதிஃபா மற்றும் இளவரசி ஹயா ஆகியோரும் உளவு பார்க்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரான்சில் Pegasus விவகாரம் தொடர்பில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இந்தியாவில் ஆளும் நரேந்திர மோடி அரசு அந்த விவகாரத்தை திசைத்திருப்பவும், குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்தியாவை களங்கப்படுத்தும் செயல் எனவும் கூறி வருகிறது.
துபாய் இளவரசி லதிஃபாவை பொறுத்தமட்டில் 2018ல் நாட்டை விட்டு வெளியேறிய அவர், தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்.
மட்டுமின்றி படகு ஒன்றில் தப்பிய அவர் இந்திய கடல் எல்லையில் வைத்து மீட்கப்பட்டு, நரேந்திர மோடி அரசால் அவர் மீண்டும் துபாய் மாகாணத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அதன் பிறகு அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
சமீப மாதங்களிலேயே அவரது புகைப்படங்கள், அவரது தோழியின் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
இளவரசி லதிஃபாவுக்கு எதிரான உளவு விவகாரம் தொடர்பில் இதுவரை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது துபாய் மாகாணம் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.