உங்களுக்கு கோவிட் இருக்கா? உங்கள் செல்போன் ஸ்கிரீன் அதை சொல்லிவிடும்!
ஒருவர் பயன்படுத்தும் மொபைல் போன் திரையிலேயே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் புதிய சோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, முக்கிய உத்திகளில் ஒன்று சோதனை செய்வது. கொரோனா தொற்றை கண்டறிய பல சோதனை முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, இப்போது இணையவழி தளங்கள் மூலம் ஓன்லைனில் சோதனை கருவிகளை ஆர்டர் செய்து, மக்களே தங்களை சோதனை செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், ஸ்மார்ட்போன் திரைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி வைரஸைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Phone Screen Test (PoST) எனப்படும் இந்த சோதனை முறை, விலை குறைந்த மற்றும் (non-invasive method) உடல் ஊடுருவல் அல்லாத முறையாகும், மேலும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று முறையாக அமையலாம்.
லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆராய்ச்சியாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி மொபைல் திரைகளில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். அதே நபர்களுக்கு வழக்கமான பி.சி.ஆர் சோதனையம் எடுக்கப்பட்டது.
பிறகு இரு வகையான சோதனைகளையும் ஒப்பிடும்போது, பி.சி.ஆர் சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைவரது PoST சோதனையிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆய்வாளர்கள், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் டாக்டர் ரோட்ரிகோ யங் (Rodrigo Young) தலைமையில், PoSt மற்றும் P.C.R சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 540 நபர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கண்டுபிடிப்புகள் eLife இதழில் வெளியிடப்பட்டன. COVID-19 நோய்த்தொற்றுகளை அடையாளம் காண இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நிலையான கண்காணிப்பு தேவைப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர், மேலும் கோவிட் -19 வெடிப்புகளைக் கட்டுப்படுத்தவும், அடுத்த ஆண்டுகளில் கவலைக்குரிய வகைகளை (Variants of Concern) அடையாளம் காணவும் PoST உதவக்கூடும் என்றும் கூறினார்.