விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட 4 வயது பிரித்தானிய சிறுமியின் புகைப்படமும் குறிப்பும்: கலங்கடிக்கும் பின்னணி
உலக நாடுகள் பல சென்று திரும்ப வேண்டும் என கனவு கண்ட சிறுமி ஒருவர் திடீரென்று மரணப்பட்ட நிலையில், அவரது புகைப்படம் ஒன்று அமெரிக்காவில் விமானத்தின் கழிவறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக புற்றுநோயால் மரணம்
பிரித்தானியாவின் வொர்செஸ்டர்ஷயர் பகுதியை சேர்ந்த கிரேஸ் கெல்லி அரிதான சிறுநீரக புற்றுநோயால் 2014ல் அவரது நான்கு வயதில் பரிதாபமாக மரணமடைந்தார்.
கிரேஸ் கெல்லி மரணமடைந்த சில வாரங்களுக்கு பின்னர் அவரது தாத்தா பாட்டி ஒரு விமானத்தில் கழிவறை கண்ணாடிக்கு பின்னால் அவளது புகைப்படத்தை கையால் எழுதப்பட்ட குறிப்புடன் மறைத்து வைத்தனர்.
அந்த குறிப்பில், எங்களது குட்டி தேவதை விமானத்தில் பல நாடுகளுக்கு பறக்க வேண்டும் என மிகுந்த ஆசைப்பட்டார். அவர் இப்போது உயிருடன் இல்லை, அவர் புகைப்படமாவது பல நாடுகளுக்கு சென்று திரும்பட்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், எவரேனும் இந்த புகைப்படத்தை கண்டெடுக்க நேர்ந்தால், தயவு செய்து மறுபடியும் மறைத்து வைத்துவிடுங்கள் எனவும் கோரியிருந்தனர். அந்த புகைப்படமானது தற்போது புளோரிடா மாகாணத்தில் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமான ஊழியர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கழிவறையில்
அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட அந்த ஊழியர், மீண்டும் அந்த புகைப்படத்தை விமானத்தின் கழிவறையிலேயே மறைத்து வைத்துள்ளார். இந்த தகவல் கிரேஸ் கெல்லியின் தாயார் மருத்துவர் ஜென் கெல்லியிடம் தெரியப்படுத்த அவரும் தமது மகள் தொடர்பில் உருக்கமாக பேசியுள்ளார்.
தமது மகள் ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்யவில்லை எனவும், ஆனால் அவரது புகைப்படம் தற்போது உலக நாடுகளுக்கு பயணப்படுவது சிறப்பான தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, தமது மகள் பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ள ஜென் கெல்லி, பொதுமக்கள் உதவியுடன் 3 மில்லியன் பவுண்டுகள் வரையில் நிதி திரட்டியுள்ளார்.