பிரித்தானியாவை கட்டி எழுப்பிய புலம்பெயர்ந்தோர்: 75ஆவது ஆண்டு விழாவின் பின்னணி
இரண்டாம் உலகப்போருக்குப் பின் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த பிரித்தானியாவைக் கட்டி எழுப்ப மேற்கிந்திய நாடுகள் அல்லது கரீபிய நாடுகளிலிருந்து வந்த புலம்பெயர்வோருக்கு நன்றி தெரிவிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இன்று பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்றன.
மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் முதலானோர் அந்த புலம்பெயர்ந்தோருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அந்த புலம்பெயர்ந்தோர் பிரித்தானியா வந்த நிகழ்வு ஒன்றின் 75ஆவது ஆண்டு விழா இன்று பிரித்தானியாவில் கொண்டாடப்படுகிறது.
விண்ட்ரஷ் (Windrush) தலைமுறை
1948 முதல் 1971 வரையிலான காலகட்டம் பிரித்தானிய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, போரின் தாக்கம் மற்றும் அதன் பின்விளைவுகளால் பிரிட்டன் பல்வேறு துறைகளில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டது.
Courtesy: TopFoto and Autograph, London.
அந்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, பிரித்தானிய அரசாங்கம் கரீபியன் காலனிகள் உட்பட பிரித்தானிய பேரரசின் கீழிருந்த நாடுகளிலிருந்து பிரித்தானியாவைக் கட்டியெழுப்ப வருமாறு புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுத்தது.
அப்படி வந்தவர்கள், அவர்களது சந்ததியினருடன் சேர்ந்து, விண்ட்ரஷ் தலைமுறை என்று அழைக்கப்படுகிறார்கள்.
Courtesy: TopFoto and Autograph, London.
Empire Windrush கப்பலின் வருகை
பிரித்தானியாவின் அழைப்பை ஏற்று, கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்த 492 பயணிகளை ஏற்றிக்கொண்டு, 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதியன்று ஹெச் எம் டி எம்பயர் விண்ட்ரஷ் (HMT Empire Windrush) என்ற கப்பல் பிரித்தானியாவை வந்தடைந்தது.
நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், கரீபியன் மக்கள், முக்கியமாக இளைஞர்கள், வேலை வாய்ப்புகளைத் தேடும் ஒற்றை ஆண்கள், சிறந்த எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கு வந்தார்கள்.
Courtesy: TopFoto and Autograph, London.
எதிர்பார்த்தது வேறு நடந்தது வேறு
ஆனால், அவர்கள் பிரித்தானியா வந்தடைந்தபோது, பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. இனரீதியில் பாரபட்சம், வீட்டுப் பற்றாக்குறை மற்றும் திறமைகளும் தகுதியும் இருந்தும் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
கடை ஜன்னல்கள் மற்றும் அறைகளில் வாடகைக்கு 'கறுப்பர்கள் வேண்டாம்’ என எழுதப்பட்ட அட்டைகள் வைக்கப்பட்டன.
தடைகளையும் மீறி பிரித்தானியாவைக் கட்டி எழுப்பிய புலம்பெயர்ந்தோர்
அத்தனை தடைகள் இருந்தும், போருக்குப் பிந்தைய பிரித்தானியாவ மீண்டும் கட்டியெழுப்புவதில் விண்ட்ரஷ் தலைமுறை முக்கிய பங்கு வகித்தது.
போக்குவரத்து, சுகாதாரம், உற்பத்தி, மற்றும் பிரித்தானிய சமுதாயத்தின் கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பிற்கு பெருமளவில் பங்களிப்பு செய்யும் பல்வேறு துறைகளில் அவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
Courtesy: TopFoto and Autograph, London.
வேலை முடிந்ததும் வேலையைக் காட்டிய பிரித்தானியா
1971 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தச் சட்டம், காமன்வெல்த் நாடுகளில் இருந்து தடையற்ற குடியேற்றத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
அந்த சட்டம் குடியேற்றக் கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து, விண்ட்ரஷ் தலைமுறை மற்றும் அவர்களது சந்ததியினரின் உரிமைகளைப் பாதிக்கபட்டன.
Courtesy: TopFoto and Autograph, London.
மேலும் அந்த மாற்றங்களால், குழந்தைகளாகவோ அல்லது இளைஞர்களாகவோ புலம்பெயர்ந்து வந்த பலர், பின்னாட்களில் தாங்கள் சட்டப்படி வாழ்வதை நிரூபிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியது.
விண்ட்ரஷ் ஊழல்
பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 இல், வின்ட்ரஷ் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் விண்ட்ரஷ் தலைமுறையைச் சேர்ந்த பலர் மோசமாக நடத்தப்பட்டார்கள், காரணமின்றி கைது செய்து காவலில் அடைக்கப்பட்டார்கள், நாடு கடத்தவும் பட்டார்கள்.
Courtesy: TopFoto and Autograph, London.
விடயம் வெளியே வந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்காக இழப்பீட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், விசாரணை ஒன்றும் துவக்கப்பட்டது. உள்துறை அலுவலகத்திற்குள் அவநம்பிக்கை மற்றும் கவனக்குறைவு கலாச்சாரம் ஒன்று இருப்பதை விசாரணை முடிவுகள் காட்டியதுடன், இந்த ஊழல் தவிர்க்கபட்டிருக்கலாம் என்றும் விசாரணை அறிக்கை கூறியது.
Courtesy: TopFoto and Autograph, London.
இன்று, அதாவது ஜூன் மாதம் 22ஆம் திகதி விண்ட்ரஷ் தினத்தின் 75 வது ஆண்டு நிறைவை பிரித்தானியா நினைவுகூரும் நிலையில், இந்தக் கட்டுரை, வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதுடன், புலம்பெயர்ந்தோரால் பிரித்தானியாவுக்கு நிகழ்ந்த மற்றும் நிகழும் நன்மைகளை அரசியல்வாதிகள் எண்ணிப்பார்த்தால் நன்றாக இருக்கும் என்பதையும் பதிவுசெய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |





