கடலில் மூழ்கி கிடக்கும் பயணிகள் விமானம்! கூகுள் மேப்ஸ் பயனர்களை குழப்பிய புகைப்படம்
அவுஸ்திரேலிய அருகே கடலில் பயணிகள் விமானம் ஒன்று மூழ்கி கிடப்பதாக புகைப்படத்தை பார்த்த கூகுள் மேப்ஸ் பயனர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதேபோன்ற சம்பவம் 2016-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் நடந்தது.
அவுஸ்திரேலியாவில் கீழே விழுந்த பயணிகள் விமானம் போன்ற புகைப்படம் ஒன்று கூகுள் மேப்ஸ் பயனர்களைக் குழப்பியுள்ளது. இது முதலில் ஒரு பயனரால் கண்டறியப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, அதன் பிறகு அது வைரலாக தொடங்கியது.
அந்தப் படத்தில், குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கார்டுவெல் மலைத்தொடரில் விமானம் முழுமையாக அப்படியே இருப்பதாக காட்டுகிறது.
ஆனால், அந்த படத்தில் விமானத்தின் எந்த அடையாளமும் இல்லை என்றும் அறியப்பட்ட எந்த விமானப் பாதையிலும் அது இல்லை என்றும் கூறப்படுகிறது. இல்லையெனில், அந்த விமானம் எதிர்பார்த்ததை விட மிகவும் தாழ்வாக பறந்து கொண்டிருக்கும்போது படம்பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தை மேற்கோள் காட்டி, பயணிகள் ஜெட் காணாமல் போனதாக எந்த புகாரும் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தகவல்களின்படி, அந்த விமானம் ஒரு ஸ்டாண்டர்ட் ஏர்பஸ் A320 அல்லது போயிங் 737 ரக விமானமாக இருக்கலாம் என நம்பப்படுகிறதை.
இது கூகுளின் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு என அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"பேய் படங்கள் (ghost images) என்று ஒரு நிகழ்வு இருப்பதாகத் தோன்றுகிறது, இது அதுவாக இருக்கலாம்" என்று அவுஸ்திரேலியாவின் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.
இது குறித்து கூகுள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இதேபோன்ற சம்பவம்
இதேபோன்ற சம்பவம் 2016-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ஹாரியட் ஏரியின் அடிவாரத்தில் விமானம் கிடப்பதாக பயனர்கள் கூறியபோது நடந்தது. ஆனால் கூகுள் பின்னர் இது ஒரு "ghost" படம் என்று அறிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் மேப்ஸில் ஒரு phantom தீவு விஞ்ஞானிகளை முற்றிலும் குழப்பமடையச் செய்தது.அவுஸ்திரேலியாவிற்கும் Sandy தீவுக்கும் இடையில் அமைந்துள்ள தீவு 24 கிமீ நீளமும் 5 கிமீ அகலமும் கொண்டதாக நம்பப்பட்டது, ஆனால் அப்படி எந்த நிலப்பரப்பும் இல்லை.
இந்தத் தீவு முதன்முதலில் 1776-ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆய்வாளர் கேப்டன் ஜேம்ஸ் குக்கின் தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள கண்டுபிடிப்புகளின் விளக்கப்படத்தில் வெளியிடப்பட்டது. சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1876-ஆம் ஆண்டில், வேலாசிட்டி எனப்படும் திமிங்கலங்களை வேட்டையாடவும் பிடிக்கவும் புறப்பட்ட ஒரு கப்பலும் அந்த தீவை பார்த்ததாக தெரிவித்தது.