ஒரு சாலை விபத்து... பொலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்: பின்னணியில் இருந்த பயங்கர சம்பவம்
சாலை விபத்து என முடித்துவைக்கப்பட்ட விபத்தொன்றின் பின்னணியில் ஒரு பயங்கர சம்பவம் இருந்ததை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
ஒரு சாலை விபத்து...
2024ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 1ஆம் திகதி, இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Sainik Chauraha என்னுமிடத்தில், கார் விபத்தொன்றில் பலியானார் தரியாப் யாதவ் என்னும் மாற்றுத்திறன் கொண்ட நபர்.
தன் சகோதரர் கொல்லப்பட்டதாக தரியாபின் சகோதரர் ராஜேந்திரா பொலிசில் புகாரளிக்க, விசாரணை மேற்கொண்ட பொலிசார், அது விபத்துதான் என வழக்கை முடித்துவைத்துவிட்டனர்.
பொலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்
இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தரியாபின் பெயரில் சுமார் 50 லட்ச ரூபாய் காப்பீடு கிளைம் செய்யப்பட்டுள்ளது.
அது குறித்து காப்பீட்டு நிறுவனம் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் தரியாப் வழக்கை மீண்டும் துவக்கியுள்ளனர்.
அப்போது, வழக்கில் பல ஓட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. தரியாப் மாற்றுத் திறன் கொண்ட ஒருவர். அவர் தன் வீட்டை விட்டு எங்குமே செல்வதில்லை.
ஆனால், அவர் தன் வீட்டிலிருந்து 27 கிலோமீற்றர் தொலைவில் விபத்தில் கொல்லப்பட்டிருந்தார், அதுவும் இரவு 10.00 மணியளவில்.
தெரியவந்த பயங்கர உண்மை
இரண்டாவது விசாரணையில் பயங்கர உண்மை ஒன்று தெரியவந்தது. ஹரிஓம் மற்றும் வினோத் என்னும் இரு சகோதரர்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது.
காப்பீட்டு முகவரான பங்கஜ் ராகவ் என்பவரிடம் அவர்கள் ஆலோசனை கேட்க, மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது மாற்றுத் திறன் கொண்டவரான ஒருவர் பெயரில் காப்பீடு எடுக்கச் சொல்லியிருக்கிறார் அவர்.
அதன்படி, தரியாப் பெயரில் பல காப்பீடுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு காப்பீடு முதிர்ச்சியடைந்ததும், அதில் கிடைத்த 50,000 ரூபாயை பிரதாப் என்னும் நபருக்குக் கொடுத்து தரியாபை கொலை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் ஹரிஓம் வினோத் சகோதரர்கள்.
அதன்படி, ஒரு நாள் இரவு தரியாபை வீட்டை விட்டு தூரமாக அழைத்துச் சென்ற வினோத் அவரது தலையில் சுத்தியலால் அடிக்க, பிரதாப் அவர் மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளார் என்னும் அதிரவைக்கும் உண்மை விசாரணையில் தெரியவந்தது.
ஹரிஓம், வினோத், பிரதாப் மற்றும் காப்பீட்டு முகவரான பங்கஜ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இதற்குள் சம்பந்தபட்டவர்கள் சுமார் 16 லட்ச ரூபாயை கிளைம் செய்து வாங்கிவிட்டார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |