9 நாட்கள் கோமாவிலிருந்த பெண்ணின் செயற்கை சுவாசத்தை நிறுத்திய மருத்துவர்கள்: திடீரென நிகழ்ந்த ஆச்சரியம்
கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமாவிலிருந்த ஒரு பெண்ணின் செயற்கை சுவாசத்தை நிறுத்த முடிவு செய்த மருத்துவர்கள், அதற்கான கருவிகளின் இணைப்பைத் துண்டித்தபோது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.
இங்கிலாந்திலுள்ள Rotherhamஇல் வாழும் Kate Green (42)ம் அவரது மகன் Stanley (7)ம் நீச்சல் குளத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பிய நிலையில், திடீரென Kateக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது.
சற்று நேரத்தில் சுருண்டு படுத்த Kateஇன் வாயில் நுரை தள்ள, அவரது மகன் பயந்து அம்மா அம்மா என அழ, அவரது கணவரான Adam (44) உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார்.
மருத்துவமனையில் Kateஐப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் பெருமளவில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது, சில நாட்கள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்றும் கூறியுள்ளார்கள்.
எட்டு நாட்கள் அவர் கோமாவிலிருந்துவிட்ட நிலையில், ஒன்பதாவது நாள் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் கருவியை அகற்றுவது என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துவிட்டு மருத்துவர்கள் செயற்கை சுவாசக் கருவியின் இணைப்பைத் துண்டிக்க, திடீரென ஆழமாக மூச்சு விட்ட Kate, சட்டென கண்களைத் திறந்திருக்கிறார்.
மருத்துவர்கள் முதல் Kateஇன் உறவினர்கள் வரை ஸ்தம்பித்துப் போய் நிற்க, தானாக மூச்சு விடத் துவங்கியுள்ளார் Kate.
ஆச்சரியத்தில் மூழ்கிய மருத்துவர்கள், Kateஇன் ஃபிட்னஸ் ஒருவேளை தாக்குப்பிடிக்க அவருக்கு உதவியிருக்கலாம் என கருதுகிறார்கள். ஆம், Kate தவறாமல் ஓட்டப்பயிற்சி செய்வதுண்டாம்.
இதற்கிடையில், Kateக்கு நினைவு திரும்பிவிட்டாலும் அவருக்கு இன்னமும் சிகிச்சை தேவைப்படுகிறது.
என்றாலும், மருத்துவர்கள் உயிர் பிழைக்கமாட்டார் என்று கூறிவிட்ட நிளையில், மீண்டும் பேசத்துவங்கியுள்ள Kate தனது பெயரையும், தங்கள் மகன் பெயரையும் சரியாக உச்சரிப்பதைக் கேட்டு மகிழ்ந்து போயிருக்கிறார் அவரது கணவரான Adam.