பெரும் தொகையுடன் வந்த பெண் மீது மோதி குளிர்பானத்தை கொட்டிய இளம்பெண்... பின்னர் தெரியவந்த திடுக்கிட வைக்கும் தகவல்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், வெளிநாட்டுப் பணத்தை மாற்றும் அலுவலகம் ஒன்றிற்கு சென்று வெளியே வந்த ஒரு பெண் மீது மற்றொரு இளம்பெண் மோத, அவர் கையிலிருந்த குளிர்பானம் முதல் பெண்ணின் உடை மீது சிந்தியிருக்கிறது.
குளிர்பானத்தை சிந்திய இளம்பெண் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள, முதல் பெண் சட்டையைத் துடைத்தவாறே அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். பிறகுதான் அவர், தான் நாணய மாற்று அலுவலகத்திலிருந்து எடுத்து வந்த பணம் காணாமல் போயிருப்பதைக் கவனித்து திடுக்கிட்டிருக்கிறார்.
அப்போதுதான் அந்த இளம்பெண் வேண்டுமென்றே தன் மீது மோதி குளிர்பானத்தைக் கொட்டி தன் கவனத்தைத் திருப்பி தன்னிடமிருந்த பணத்தை பிக் பாக்கெட் அடித்துச் சென்றிருப்பது இந்த பெண்ணுக்கு புரிந்திருக்கிறது.
அவர் ஆயிரக்கணக்கான பிரித்தானிய பவுண்டுகளை பறிகொடுத்த நிலையில், இதேபோல் மற்றொரு பெண்ணும் ஜெனீவா ரயில் நிலையத்தின் அருகிலுள்ள அதே நாணய மாற்று அலுவலகத்தின் அருகில் ஒரு இளம்பெண்ணிடம் ஆயிரக்கணக்கான சுவிஸ் ஃப்ராங்குகளை இழந்துள்ளார்.
இந்த திருட்டுக்கள் தொடர்பாக சிசிடீவி கமெரா காட்சிகளின் அடிப்படையில் தங்கள் 20 வயதுகளிலிருக்கும் இரண்டு இளம்பெண்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர்கள் பணம் எடுத்து வருபவர்கள் மீது இதேபோல் குளிர்பானத்தை வேண்டுமென்றே கொட்டி, அவர்கள் கவனத்தை திசை திருப்பி பெரும் தொகையை பிக் பாக்கெட் அடித்திருப்பது தெரியவந்துள்ளது.
அந்த இளம்பெண்கள் இருவரும் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
மக்கள் பெரும்தொகையான பணத்தை தங்களுடன் கொண்டு செல்லும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.