பிரித்தானியாவை விட்டு வெளியேறும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள்
பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர் தொடர்ந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருகிறார்கள்.
தொழிலதிபர்களும், திறமையான வல்லுநர்களும் பிரித்தானியாவை விட்டுவிட்டு துபாய் அல்லது இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுவருகிறார்கள்.
என்ன காரணம்?
இந்தியாவில் பிறந்தவரான ஹெர்மான் நருலா (Herman Narula, 37), 2.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான Improbable என்னும் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாவார்.

பிரித்தானிய பட்ஜெட்டுக்கு முன் கசிந்துவரும் வரிக் கொள்கைகள் குறித்த தகவல்கள் காரணமாக தான் பிரித்தானியாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கிறார் ஹெர்மான்.
துபாயில் சென்று குடியமர முடிவுசெய்துள்ள ஹெர்மான், வரும் பட்ஜெட்டில், பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதற்கே வரிகள் விதிக்கப்படலாம் என தகவல் கிடைத்ததாகவும், தற்போது அது கைவிடப்பட்டுவிட்டாலும், கெய்ர் ஸ்டார்மர் அரசின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ்வது கடினம் என்றும் கூறியுள்ளார்.
இப்படி ஹெர்மானைப்போலவே பல செல்வந்தர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறத் திட்டமிட்டுவருகிறார்கள்.
பிரித்தானியாவை விட்டுவிட்டு வேறு நாடுகள் நோக்கித் திரும்பிவரும் செல்வந்தர்கள் பட்டியலில், இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் ரியோ ஃபெர்டினாண்ட், Revolut நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நிக் ஸ்ட்ரோன்ஸ்கி ஆகியோரும் அடங்குவர்.

அவர்கள் இருவரும் பிரித்தானியாவை விட்டு வெளியேறி, துபாய்க்கு சென்று குடியமர்ந்தேவிட்டார்கள்.

இந்நிலையில், பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளி செல்வந்தர்களான அரோரா குழுமத் தலைவரான சுரிந்தர் அரோரா, AKQA நிறுவனரான அஜாஸ் அஹ்மத் முதலானோர் பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில், செல்வந்தர்கள் சிலர் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் வரிகள் தொடர்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக பல தொழிலதிபர்களுக்கு செலவுகள் அதிகரித்துள்ளன.

அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு தயாராகும் நிலையில், பிரித்தானியா தனது வரிக்கொள்கைகள் குறித்து கவனமாக பரிசீலிக்கவேண்டியது அவசியமாகிறது. தொழிலதிபர்களை உற்சாகப்படுத்தவேண்டுமேயொழிய அவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, வரிகள் அதிகரித்துவருவதாலும், மக்கள் வரி செலுத்தியும் அதற்கேற்ப மருத்துவம் முதலான சேவைகள் திருப்திகரமாக இல்லாததாலும், அடுத்த பட்ஜெட்டில் மேலும் வரிகள் விதிக்கப்படலாம் என்பதாலும் செல்வந்தர்கள் பிரித்தானியாவை விட்டு வேறு நாடுகளுக்கோ அல்லது தங்கள் சொந்த நாட்டுக்கோ திரும்ப திட்டமிட்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |