பற்றியெரியும் வீட்டுக்குள் புகுந்து 5 குழந்தைகளைக் காப்பாற்றிய பீட்சா டெலிவரி நபர்! வைரலாகும் வீடியோ
அமெரிக்காவில் தீப்பிடித்து எரியும் வீட்டில் இருந்து இரண்டு குழந்தைகள் உட்பட 5 சிறுவர்களை, பீட்சா டெலிவரி நபர் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார். அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள லாஃபாயெட் நகரத்தில் இந்த சம்பவத்தின் வீடியோவை லாஃபாயெட் பொலிஸார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஜூலை 11-ஆம் திகதி இரவு நடந்த இந்தச் சம்பவம், பொலிஸ் அதிகாரி ஒருவரது பாடி கமெராவில் பதிவானது. அதில் 25 வயதான பீட்சா டெலிவரிமேன் Nicholas Bostic குழந்தையை தூக்கிக்கொண்டு எரியும் வீட்டில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
காவல் துறை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், போஸ்டிக் 1, 6, 13 மற்றும் 18 வயதுடைய நான்கு உடன்பிறப்புகளையும், தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுவரையும் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளது.
வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அவ்வழியே காரில் சென்ற போஸ்டிக், காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் இருப்பவர்களைக் காப்பாற்றச் சென்றார். வீட்டின் பின்கதவு வாழையாக உள்ளே சென்று நான்கு பேரை வெளியே கொண்டுவந்தார்.
Here’s the video to go along with the story. pic.twitter.com/TvZ5wzCg1f
— LafayetteINPolice (@LafayetteINPD) July 15, 2022
ஆனால் 6 வயது பெண் குழந்தை உள்ளே இருப்பதாக அவர்கள் அவரிடம் சொன்னதும், போஸ்டிக் மீண்டும் தீப்பிழம்பிற்குள் சென்றார், அடர்ந்த புகை இருந்தபோதிலும், அவர் குழந்தையைக் கண்டுபிடித்து வெளியே தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்.
இந்த சம்பவத்தில் போஸ்டிக் கடுமையாக காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். Nicholas Bostic தற்போது ஒரு சூப்பர் ஹீரோவாக பாராட்டப்பட்டு வருகிறார்.