ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸிலும் பிளான் C... Omicron கொரோனா பரவலால் பரபரப்பாகும் தலைவர்கள்
Omicron வகை மரபணு மாற்ற கொரோனா பரவல் காரணமாக, தற்போதிருக்கும் பிளான் B கட்டுப்பாடுகள் போதாது என்றும், Omicron வைரஸை எதிர்கொள்ளும் வகையில் மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடலாம் என ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அதிக மக்கள் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்துமாறு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளதையடுத்து, பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதை மேலும் வேகப்படுத்த ஸ்காட்லாந்து முதல் அமைச்சரான Nicola Sturgeonம், வேல்ஸ் முதல் அமைச்சரான Mark Drakefordம் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரண்டு நாடுகளிலுமே ஏற்கனவே மாஸ்க் அணிதல், கொரோனா பாஸ்போர்ட்கள், வீடுகளிலிருந்தவண்ணம் வேலை ஆகிய கட்டுப்பாடுகள் பல வாரங்களாகவே அமுலில் உள்ளன. இங்கிலாந்தில் அவை இப்போதுதான் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்காட்லாந்திலுள்ள வயது வந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வழங்கும் திட்டத்தை ஸ்காட்லாந்து முதல் அமைச்சரான Nicola Sturgeon நேற்று இரவு உறுதி செய்தார். அதே நேரத்தில், வரும் வாரங்களில் கொரோனா பரவலைப் பொருத்து மேலும் அதிக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வேல்ஸ் முதல் அமைச்சரான Mark Drakefordம் நாம் மிகவும் மோசமான சூழலை எதிர்கொள்ள இருக்கிறோம். ஆகவே, வேல்ஸ் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில், நாம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டி வரலாம் என்று கூறியுள்ளார்.